Skip to main content

அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை நியாயமானது: அன்புமணி

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை நியாயமானது: அன்புமணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இராஜாமுத்தையா மருத்துவக்  கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டும்; கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக மாணவர்கள் போராட்டத்தை அடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பல்கலைக்கழகத்தை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்படியே அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த இராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், அதன் பயன்கள் இன்று வரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இராஜாமுத்தையா மருத்துவக்  கல்லூரி, மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பதற்காகவே தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இராஜாமுத்தையா மருத்துவக்  கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தான் முறையாகும். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் அந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலையின் அங்கமாகவே நிர்வகித்து வருகிறது. இந்த இரு கல்லூரிகளும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவற்றில் மருத்துவப் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலை அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் அதே கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது ஏற்க முடியாததாகும்.

தமிழக அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு  கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ 5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இளநிலை பல் மருத்துவம்,  முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8.00 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாக அமையாதா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு நிதியில் தான் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை  மற்றும் கல்வித் தகுதியில் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் சரியாகும்? இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பது தான் சரியான அணுகுமுறை.

மாறாக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளித்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது.  அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அன்பும், பேச்சும் தான் சிறந்த ஆயுதங்கள் ஆகும். மாறாக, அடக்குமுறையை ஏவ நினைத்தால் அது எரியும் தீயில் ஊற்றப்பட்ட பெட்ரோலாக போராட்டத்தை மேலும் பரவச்செய்து விடும் என்பதை  ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்