அனிதா தற்கொலை - பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.கே.ரங்கராஜன் எம்பி கடிதம்
மாணவி அனிதாவின் தற்கொலையைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார்.
அனிதாவின் தற்கொலை – நீட் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான அவசியம். இந்தக் கடிதத்தை, தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து கனத்த மனதுடன் எழுதுகிறேன். பிரிக்ஸ் மாநாட்டுக்கு தயாராவதில் நீங்கள் மும்முரமாக இருக்கலாம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி எனது கடிதத்தை வாசிப்பதுடன், கூடிய விரைவில் கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத நிலையில், மாணவி அனிதா தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். இந்த சூழல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திடம் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் உள்ள சேர்க்கை நடைமுறைகளை கணக்கில்கொள்ளாமல், கல்லூரிச் சேர்க்கை முறையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் அரசு கொடுத்த நிர்ப்பந்தம்தான் இதற்குக் காரணம் என்பது வெளிப்படையானது.
தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்த சேர்க்கை முறையானது தகுதியான ஏழைக் குழந்தைகள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு உதவியாக இருந்தது. 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டது.
நீட் முறையில், மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் செலுத்திய முயற்சிகள் முழுமையாக புறந்தள்ளப்பட்டன. இப்போதுள்ள உயர்கல்வி முறையில், மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களின் உயர்கல்வித் துறைகளைத் தேர்வு செய்வதில் மிக முக்கியமாக கருதப்படுகின்றன.
இந்த முக்கியத்துவத்தைக் கணக்கிலெடுத்தே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன, மாணவர்களும் கடும் முயற்சி செய்து படிக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு தன்னாலான உதவிகளைச் செய்கின்றனர். எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள் என்பது மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது.
விடாமுயற்சியோடு 2 ஆண்டுகள் படித்த படிப்பின் மதிப்பெண்கள் மொத்தமாக புறமொதுக்கப்பட்டு, புதிய வகையிலான கல்வித்திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவைத்தான் இப்போது தமிழகத்தில் பார்க்கிறோம்.
நீட் பிரச்சனையில் அரசு தனது நிலைப்பாட்டை பரிசீலிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. பழைய நிலையை அரசு திரும்பக் கொண்டுவர வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்வில் மிகச் சிறப்பாக தேர்ச்சிபெற்ற புத்திசாலி மாணவர்கள் விரக்தியடைவதைத் தடுப்பதற்கு அது உதவியாக அமையும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.