Skip to main content

‘என் மண், எண் தேசம்’ எனும் புதிய இயக்கம் - பிரதமர் மோடி

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

New Movement 'En Man, En Desam' - Prime Minister Modi

 

பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (30ம் தேதி) மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய மோடி,  “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நாம் அனைவரும் சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடி வருகிறோம். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி மேலும் ஒரு இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ‘என் மண், எண் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்படும்.

 

இதன்படி நாடு முழுவதும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த இயக்கத்தின் கீழ் அமுத கலச யாத்திரை நடத்தப்படும். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை டெல்லியை வந்தடையும். அந்த கலசங்கள் கூடவே மரக்கன்றுகளும், செடிகளும் எடுத்து வரப்படும். அந்த கலசங்களில் உள்ள மண் அனைத்தும் டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு அந்த இடத்தில் அமுதப்பூங்காவனம் அமைக்கப்படும். 

 

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உன்னத அடையாளமாக இருக்கும். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தைப் போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம், நமது கடமைகளை உணர்ந்து நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூற முடியும். சுதந்திரத்தின் மதிப்பையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

 

விளையாட்டு உள்ளிட்ட மற்ற விஷயங்கள் மீது இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலமாகப் போதைப் பொருள்கள் பயன்பாட்டை ஒழிக்க முடியும். அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகமாகக் காணப்பட்ட பிசார்பூர் என்ற கிராமம், தற்போது ‘மினி பிரேஸில் ’ என்று அழைக்கப்படும் அளவுக்கு கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கி வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்