
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (10-05-25) மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் தாக்குதல் நிறுத்த முடிவை மீறி, இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்து வருகிறது. பாகிஸ்தான் தாக்கினால் எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.