Skip to main content

“இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய்” - கர்னல் சோஃபியா

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Colonel Sophia says Pakistan's claim that Indian Army damaged mosques is false

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில், ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்தது. மேலும், இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வரும் தாக்குதல் முயற்சிகளுக்கு இந்தியா பதிலளித்து வந்தது. 

இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (10-05-25) மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதிக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

Colonel Sophia says Pakistan's claim that Indian Army damaged mosques is false

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு கமாடோர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் பேசிய லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரெஷி, “பாகிஸ்தான் தனது JF 17 விமானத்தால் நமது S400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறியது முற்றிலும் தவறு. இரண்டாவதாக, சிர்சா, ஜம்மு, பதான்கோட், பட்டிண்டா, நலியா மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள நமது விமான நிலையங்கள் சேதமடைந்ததாக தவறான தகவல் பிரச்சாரத்தையும் நடத்தியது. அது தவறான தகவல் பிரச்சாரமும் முற்றிலும் தவறு. மூன்றாவதாக, பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின்படி, சண்டிகர் மற்றும் வியாஸில் உள்ள நமது வெடிமருந்து கிடங்கு சேதமடைந்தது என்பது, இதுவும் முற்றிலும் தவறு. இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், நமது ராணுவம் இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பின் மிக அழகான பிரதிபலிப்பாகும் என்பதையும் நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “எங்கள் நடவடிக்கைகள், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத முகாம்கள் மற்றும் வசதிகளை மட்டுமே குறிவைத்துள்ளன. இந்திய ஆயுதப் படைகளால் எந்த மதத் தலங்களும் குறிவைக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக, நாங்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் மிகவும் கடுமையான மற்றும் நீடிக்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளது. அது நிலத்திலும் வான்வழியிலும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்களான ஸ்கர்டு, ஜகோபாபாத் மற்றும் போலாரி ஆகியவற்றில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, AD ஆயுத அமைப்பு மற்றும் ரேடார் இழப்பு பாகிஸ்தான் வான்வெளியின் பாதுகாப்பை சாத்தியமற்றதாக்கியது. கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே, இராணுவ உள்கட்டமைப்பு, கட்டளை கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தளவாட நிறுவல்களுக்கு விரிவான மற்றும் துல்லியமான சேதம் ஏற்பட்டது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்