Skip to main content

“மீண்டும் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது” - விக்ரம் மிஸ்ரி

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

 Vikram Misri says A befitting reply has been given to Pakistan for its repeated violations

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது. 

இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (10-05-25) மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

ஆனால், தாக்குதல் நிறுத்த முடிவை மீறி, இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியானது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 

 Vikram Misri says A befitting reply has been given to Pakistan for its repeated violations

இந்த நிலையில், அவசர அவசரமாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் இன்று (10-05-25) இரவு 10 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இடையே இன்று மாலை ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக, இந்தப் புரிதலை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.ஆயுதப்படைகள் நிலைமை குறித்து கடுமையான விழிப்புணர்வைப் பேணி வருகின்றன. சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டுக் கோட்டிலும் எல்லை மீறல்கள் மீண்டும் நிகழும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் கடுமையாகக் கையாள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்