
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை (12.05.2025) சித்திரா பௌர்ணமி அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனாகக் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீச்சி அடிப்பது வழக்கம்.
இந்நிலையில் மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்மலையிலிருந்து, அழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு நேற்று (10.05.2025) மாலை தங்கப் பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார். அதன்படி பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளிய பின்னர் இன்று (11.05.2025) மதுரை மாநகருக்கு வருகை தந்துள்ளார். அதாவது 3 மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா...’ என்ற கோஷம் எழுப்பி கள்ளழகருக்கு உற்சாக வரவேற்று அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து 498 மண்டகப்படிகளில் எழுந்தருளி இன்று இரவு தல்லாக்குளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் எழுந்தருளி அங்கு அவருக்கு 11:30 மணிக்குத் திருமஞ்சனம் ஆகிறது. மேலும் கருப்பசாமி கோவிலில் இருந்து சங்கர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நாளை காலை 05:45 மணி முதல் 06.05 மணியளவில் மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள வைகை ஆற்றில் அழகர் எழுந்தருள்கிறார். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.