காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்யருக்கு வெளியுறவுத்துறை உதவி!
காஞ்சிபுரம் கோவில் வாசலில் நின்று யாசகம் கேட்டுக்கொண்டிருந்த ரஷ்ய இளைஞருக்கு வெளியுறவுத்துறையின் சார்பில் உதவி வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் கோவில் வாசலில் நின்றுகொண்டு வெளிநாட்டவர் ஒருவர் கோவிலுக்கு செல்பவர்களிடம், தொப்பியை நீட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இதைக் கண்ட சிலரும் அவருக்கு உதவிவிட்டு சென்றுள்ளனர். இந்தத் தகவல் விரைவிலேயே காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பின்னர், அங்கு விரைந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த நபரின் பெயர் இவஞ்சலின் (வயது 24) என்பதும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் இந்தியாவிற்கு சுற்றுலா நிமித்தமாக வந்த அவரது ஏ.டி.எம். கார்டு செயல்படாமல் போனதை அடுத்து, வேறுவழியில்லாமல் கோவில் வாசலில் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, கோவிலுக்கு வந்த சிலரிடம் பணம் வசூல் செய்து அந்த இளைஞரை சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு செல்லுமாறு காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘உங்கள் நாடான ரஷ்யா எங்களது நீண்டகால நண்பன், சென்னையில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருந்தார்.
வெளிநாட்டவர் ஒருவர் சுற்றுலாவிற்காக வந்து, பணமில்லாமல் கோவில் வாசலில் நின்று யாசகம் கேட்டு, பின் அவருக்கு அரச உதவிகள் அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.