டிரம்ப் பற்ற வைக்கும் நெருப்பு...
ஜெருசலேம், இஸ்ரேலுக்கா பாலஸ்தீனுக்கா?

"ஜெருசலேம் எங்கள் இதயம், அதை விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று பாலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள். "இது மிகவும் முக்கியமான, மக்களின் உணர்வு சார்ந்த விஷயம், கவனமாக கையாள வேண்டும்" என்று கூறி சீனாவும், "இதில் அவசரப்படுவது மிகப்பெரிய நெருப்பை பற்றவைக்கக்கூடும்" என்று கூறி துருக்கியும், ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளும் எதிர்க்கும் விஷயத்தை ஒற்றை ஆளாக ஆதரித்து, மிகப்பெரிய பிரச்சனையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இஸ்ரேல், தற்போது தனது தலைநகராக இருக்கும் டெல் அவிவை மாற்றி ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு செயல்பட வேலைகளை தொடங்கவிருக்கும் திட்டத்தை அறிவித்தது. அதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததிலிருந்து தான் இந்த போராட்டங்களும் எதிர்ப்பும். அங்கீகரித்ததோடு மட்டுமின்றி அமெரிக்காவின் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றவிருப்பதாகவும் அறிவித்தார். இது நடக்க ஆண்டுகள் ஆகும். ஆனாலும் இந்த தொடக்கப்புள்ளி, இஸ்ரேல்-பாலஸ்தீன் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளியாகவும் அமைய வாய்ப்புள்ளது. இஸ்ரேலுக்கான மற்ற 83 நாடுகளின் தூதரகங்களும் டெல்-அவிவில் மட்டுமே இருக்கின்றன. அமெரிக்கா மட்டும் தன் துணை தூதரகத்தை ஜெருசலேமில் வைத்துள்ளது.

சரி, இஸ்ரேல் தன்னுடைய தலைநகரை தான் மாற்றிக்கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை, அமெரிக்காவிற்கு என்ன ஆர்வம்? ஜெருசலேம், உலகின் புனித நகரங்களில் ஒன்று. யூதர்களின் புனித இடமாக கருதப்படும் மேற்கு சுவரும், இஸ்லாமியர்களின் புனித இடமாகக் கருதப்படும் அல்-அஃசா மசூதியும் இங்கு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் என்று மூன்று மதங்களிலும் மக்கள் இருக்கின்றனர். இதுமட்டுமல்லாது, இஸ்ரேலும் பாலஸ்தீனியமும் இந்த நகரத்திற்காக உரிமைகொண்டாடி வருகின்றனர். 1949 ல் முடிந்த போரில் இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமையும், பாலஸ்தீன் கிழக்கு ஜெருசலேமையும் தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். அதன் பிறகு 1967ல் நடந்த 6 நாட்கள் போரில் இஸ்ரேல் பாலஸ்தீனிடமிடமிருந்து கிழக்கு பகுதியையும் கைப்பற்றியது. ஐநா இதனை சர்வதேச சட்டமீறல் என்று விமர்சித்து இன்று வரை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக மட்டுமல்லாமல், இஸ்ரேலின் நகராகவே ஏற்காமல் இருக்கிறது. பாலஸ்தீனோ ஜெருசலேமின் கிழக்குப் பகுதியை எதிர்காலத்தில் தன் தலைநகராக்க எண்ணியுள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேலின் அறிவிப்பும் அதற்கு அமெரிக்காவின் அங்கீகாரமும் ஒரு நெருப்பை பற்ற வைத்திருக்கின்றன.

1995ஆம் ஆண்டிலேயே இந்த தூதரக மாற்ற முடிவை அமெரிக்கா எடுத்து உள்ளது. ஆனால் அதன் பிறகு பதவியில் இருந்த அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா போன்றவர்கள் இந்த திட்டத்தை தவிர்த்தனர். தற்போது அதிபராக இருக்கும் டிரம்ப் இதை மும்முரமாக செயல்படுத்தி வருகிறார். ஜெருசலேமில் 37% அரபு மக்களும், 61% யூதர்களும் இருக்கின்றனர். கிழக்கு ஜெருசலேமில் பெரும்பான்மையான மக்கள் பாலஸ்தீனை சேர்ந்தவர்களாக உள்ளனர். பாலஸ்தீன் மக்கள் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். டிரம்ப் பதவி ஏற்ற பின்பு இஸ்லாமியர்களின் மீதான அணுகுமுறை உலகம் அறிந்தது. மேலும், ட்ரம்பின் வாக்கு வங்கி, பெரும்பாலும் யூதர்களையும், மதப்பற்று அதிகமுள்ள கிறிஸ்தவர்களையும் கொண்டிருப்பதால் அவர்களை திருப்திப்படுத்தும் செயலாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை ஆதரித்திருப்பவர்களின் பட்டியலும் அதை அழுத்திச் சொல்கிறது. வடகொரியா, தென்கொரியா இடையிலான பிரச்சனையில் மூக்கை நுழைத்து அணையாமல் பார்த்துக்கொள்கிறார். 'உங்களுக்கு தேவையான ஆயுதங்களை நாங்கள் விற்போம்' என்று அறிவிக்கிறார். இந்தியா இந்த விஷயத்தில் மேலோட்டமான நிலைப்பாட்டில் தான் உள்ளது. அடிப்படையில் வியாபாரியான டிரம்ப், பிற நாடுகளின் அமைதியையும் விற்காமல் இருக்க வேண்டும்.
சந்தோஷ் குமார்