Skip to main content

பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?

கௌசல்யா பகிரும் எட்டு மாத  நினைவுகள்  




தமிழகத்தில் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் உலுக்கியது, உடுமலையில் நிகழ்ந்த சங்கர் படுகொலை. தன் மகள் விருப்பப்பட்ட வாழ்க்கையை விட, தன் மகளின் உயிரை விட, சாதி முக்கியம் என்றெண்ணிய பெற்றோரின் வெறி அது. நேற்று (12டிசம்பர்17), இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் பேசிய கௌசல்யா, தன் தாய்  விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதியுடன் கூறினார். சாதி, அரசியல், பெண்ணியம் எதுவும் தெரியாமல் இருந்த அந்த இளம் மனதின் மீது நடந்த சாதி  வெறியாட்டம் தான் அதை இத்தனை உறுதியாக்கியிருக்கிறது. தன் பெற்றோரை விட சங்கரும் அவரது குடும்பமும் தனக்கு ஏன் முக்கியம் என, சில மாதங்களுக்கு முன்பு  கௌசல்யா நம்மிடம் பகிர்ந்த நினைவுகள் இங்கே...     

"நான் எங்கள் வீட்டில் ஒரே பெண். சின்ன வயசுல இருந்தே எனக்கு எது பிடிச்சாலும் வாங்கித் தருவாங்க, செல்லமா தான் வளர்த்தாங்க. ஆனா, சங்கரை எனக்கு பிடிச்சதுக்கு காரணத்தை கூட அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அவர்கள் பேசியதெல்லாம், நான் அவனை விட்டுட்டு வந்துறணும் என்பதற்காக மட்டும் தான்.

எங்க வீட்டுல, எங்க உறவினர்கள் வீட்டுல என்று எங்கேயுமே பெண்களுக்குனு தனி வாழ்க்கை, விருப்பமெல்லாம் இல்லை. எப்பவும் அடுப்படியிலதான் இருப்பாங்க. எங்க அப்பா ஒரு தடவை கூட எங்கம்மாவுக்கு உதவி நான் பாத்ததில்லை. ஆனா, சங்கர் கிட்டேயும் சங்கர் வீட்டுலயும் அந்த சுதந்திரத்தை நான் முழுசா உணர்ந்தேன். துணி துவைத்து தருவதாலயும், சமைப்பதாலயும், நான் சாப்பிடும் தட்டை கழுவுவதாலும் அது  காதலா, சங்கர் முக்கியமாகிட்டானான்னு கேட்டா, எனக்கு அந்த விஷயமே பெருசாத்தான் இருந்தது.  






படிக்கும்போதே  கல்யாணம் பண்ணிக்கணும் என்பது கூட எங்க விருப்பமில்ல. படிக்கணும், வேலை பாக்கணும், நல்லா வந்து ஒன்னா  வாழனும் என்பது தான் எங்க கனவு. ஆனால், எங்க வீட்டுல இந்த விஷயம் தெரிஞ்ச உடனே, எனக்கு வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அதுனால தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்க தள்ளப் பட்டோம்.    

சங்கர் என்னை 'பாப்பா'னு தான் கூப்பிடுவான். அவன் குடும்பத்துல, எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. துணி துவைக்கும்போது , நான் சோப்பு போட்டு கொடுத்தா, அதை சங்கர் அலசுவான், அவன் தம்பி காயப்போடுவான். எல்லா வேலையிலும், எல்லா தருணத்திலும் சமமா உணர்ந்தோம். ஆனால், இது தான் பெண்ணியம், சமநிலை இப்படி எந்த அரசியலும் தெரியாமலேயே நாங்க அப்படி வாழ்ந்தோம்.    






எட்டு மாசம் அவன் கூட வாழ்ந்தேன். சங்கர், என்னை தன் பிள்ளை போல பாத்துக்கிட்டான். வீட்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்திருந்தால், நான் ஒரு அடிமை போலத்தான் வாழ்ந்திருப்பேன். எனக்கு நல்லா தெரியும்.  ஒரு போதும் என்னை அவன் அடிமையாக உணர வைத்ததில்லை. காலையில் எழுந்து சமைப்பது, துணி துவைப்பது எல்லாம் அவன் செய்தான். இது பெண் செய்யும் வேலை, இது ஆண் செய்யும் வேலை என்று அவன் பிரித்து பார்த்ததே இல்லை. என்னை ஒரு போதும் அப்படி உணரவைத்ததில்லை. என் அம்மாவிடம் இருந்த தாய்மையை விட அதிகமான தாய்மையை அவனிடம் உணர்ந்தேன்.       

சங்கர் என்னுடன் இருந்திருந்தால், இதே தைரியம், துணிச்சல் எனக்கு இருந்திருக்கும். ஆனால், சமூகத்துக்காக வாழ்ந்திருக்க மாட்டேன். இப்போ, நான் சமூகத்துக்காக வாழுறேன். சாதி இல்லாத சமூகத்தை உருவாக்க அடுத்த தலைமுறையை தயார் செய்வேன்."

- வசந்த் 
சந்திப்பு : ஃபெலிக்ஸ்     

சார்ந்த செய்திகள்