தேர்தலில் போட்டியிடும் ரோபோ!
தர்மயுத்தம் செய்யுமா?

உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதன் தேவையும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகள் பலவும் மனிதனுக்கு உதவும் வகையில் பல விதமான ரோபோக்களை உருவாக்கி வருகின்றன. உதாரணத்திற்கு சமையல் செய்யும் ரோபோ ,வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ, நாய் வடிவிலான ரோபோ , குடியுரிமை பெற்ற ரோபோ கடைசியில் மரணத்திற்கு பிறகு காரியம் செய்யும் ரோபோ கூட உள்ளன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மக்களின் குறை தீர்க்க நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அரசியல்வாதி ரோபோ ஒன்றை வடிவமைத்து வருகின்றனர்.

இந்த ரோபோவிற்கு "சாம்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த ரோபோவை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தொழிலதிபர் நிக் ஜெரிட்சன் [49] என்பவரின் தலைமையிலான குழுவினர் உருவாக்கி வருகின்றனர். இந்த ரோபோவை பற்றி நிக் கூறியது, "இந்த ரோபோ மிகவும் அறிவித்திறனுடையது. உலக நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை கூட இந்த செயற்கை அரசியல்வாதியின் மூலம் தீர்க்கலாம். உள்ளூர் பிரச்சனைகளை மக்கள் சமூகவலைதளம் மூலம் சாமிடம் தெரிவிக்கலாம். அதனை உடனுக்குடன் அறிந்து விரைந்து மேற்கொள்ளும். சாதாரண அரசியல்வாதிகளை விட இந்த செயற்கை அரசியல்வாதி சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சாமை முழுதிறனுடைய அரசியல்வாதியாக உருவாக்க முயற்சி எடுத்துவருகின்றோம். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு நாட்டின் சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் இதனை மேற்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
அங்கு சிறப்பாக செயல்படவேண்டுமென்பதற்காக ஒரு ரோபோ அரசியல்வாதியை உருவாக்குகிறார்கள். தமிழகத்திலோ ஓராண்டுக்கு முன் வரை பல அரசியல்வாதிகளும், நின்று வணங்கி, குனிந்து கும்பிட்டு ரோபோக்களாக இருந்தனர். 'சிட்டி'க்கு கோபம் வந்தது போல திடீரென்று தர்மயுத்தம் செய்தாலும் இன்றுவரை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. யாரோ இயக்கும் ரோபோக்களாகத்தான் செயல்படுகிறார்கள். ஆனால், தங்களுக்கு வேண்டியதை மட்டும் சரியாக செய்துகொள்கிறார்கள். இங்கும், சுயநலமில்லா அரசியல்வாதி ரோபோக்கள் வந்தால் நல்லது தான்.
ஹரிஹரசுதன்