சிவப்பு நிறமளித்த கொக்கோ கோலா...
கிறிஸ்துமஸ் தாத்தா கதை

கிறிஸ்துமஸ், டிசம்பர் 25 தேதி ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கிறிஸ்தவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் காலம் வந்துவிட்டால், வீட்டின் முன் விளக்குகளால் தோரணம், பல வண்ணங்களில் 'ஸ்டார்'கள், ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பட்ட குடில்கள் என அழகாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இனிப்புகள், ரம்ஜானுக்கு பிரியாணி என்றால், கிறிஸ்துமஸ்க்கு கேக்! இவற்றையெல்லாம் தாண்டி, கிறிஸ்துமஸின் அடையாளமாக இருப்பவை கிறிஸ்துமஸ் மரமும், தாத்தாவும். வெளிநாடுகளில், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை நட்டு வைத்து குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பார்கள். நம்மூரில் சவுக்கு மரத்தைத்தான் பொதுவாக கிறிஸ்துமஸ் மரமாக வைப்பார்கள். 'சாண்டா க்ளாஸ்' என்று அழைக்கப்படும் இவர் நல்ல தொப்பையுடன், நீண்ட வெள்ளை நிற தாடி, சிவப்பு ஆடை அணிந்த தோற்றத்துடன் இருப்பார். சாண்டா, குழந்தைகள் என்னவேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த பரிசை கொடுப்பார் என்றும் நம்பப்படுபவர். கிறிஸ்துமஸ் மரமும், சாண்டாவும் எவ்வாறு இந்த கிறிஸ்துமஸில் இணைந்தார்கள் என்று பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தா என்பது கற்பனை கதை என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவருக்கு சாண்டா க்ளாஸ் என்ற பெயர் வர காரணம். செயின்ட். நிகோலஸ் என்ற புனிதர் தான். இவர் தன் ஊரில் உள்ள மக்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு தெரியாமலேயே வீட்டின் புகைக்கூண்டில் போட்டு உதவி செய்துள்ளார். ஒரு நாள் இவ்வாறு அவர் உதவி செய்கையில் அந்த வீட்டுக்காரரிடம் மாட்டிக்கொண்டாராம். இருந்தாலும், நிகோலஸ், "நான் செய்த இந்த உதவியை யாரிடமும் சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார். இவர் 'மைரா' எனும் நகரத்தில்(துருக்கி) பிறந்து வளர்ந்தார். இவர் இறந்த தேதியாக டிசம்பர் 6 சொல்லப்படுகிறது. ஆதலால் அன்று 'நிகோலஸ் ஃபீஸ்ட் நாளாக' அனுசரிக்கப்பட்டு வருகிறது. செயின்ட் நிகோலஸ் என்ற இவரது பெயர் காலப்போக்கில் சாண்டா க்ளாஸாகவும், ஃபாதர் கிறிஸ்துமஸ் என்றும் மாறியது.

கொக்கோ கோலா நிறுவனம் 1920 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தா, சிவப்பு நிற உடையணிந்து கொக்கோகோலா அருந்துவது போன்று வரைந்தது. அது புகழ் பெற்று, இன்று வரை சாண்டாக்ளாஸ் என்றாலே சிவப்பு நிற ஆடைகள் என்று வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பே 18 ஆம் நூற்றாண்டில் இவரது தோற்றம் கற்பனையாக சில பத்திரிகைகளில் வெளியானது. ஆரம்ப காலங்களில் பச்சை, நீளம் என்றெல்லாம் கூட ஆடைகளுக்கு நிறம் தந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் தாத்தா வட துருவத்தில் இருக்கிறார், வானில் பறந்து வந்து சிறுவர்களுக்கு பரிசளிப்பார் என்று நம்பினார்கள், இன்றும் நம்புபவர்கள் இருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம், இந்தியாவிலும் வைப்பார்கள். அது சவுக்கு மரம். முதன் முதலில் ஜெர்மனியில் இருந்துதான் கிறிஸ்துமஸ் மரம் உலகம் முழுவதும் பரவியது. இந்த மரத்தின் பொதுவான பெயர் "ஸ்டார் பைன்". ஜெர்மனியில் உள்ள 'பாகன்' என்னும் இயற்கையை வழிபடும் இனம்தான் அவர்களின் கடவுளான தாரிற்கு இந்த மரத்தை அடையாளமாக வைத்தார்கள். பின்பு அதையே கிறிஸ்துவர்களும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் கிறிஸ்துவத்தில் 'ட்ரினிட்டி' என்னும் முக்கோணம் நம்பப்படுகிறது. இந்த மரமும் ஒரு முக்கோண வடிவை கொண்டதால் இது கிறிஸ்துமஸில் கொண்டுவரப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
சந்தோஷ் குமார்