Skip to main content

மோடியே பிரச்சனைகளை ஒப்புக்கொண்டார்!

Published on 09/11/2017 | Edited on 09/11/2017
மோடியே பிரச்சனைகளை ஒப்புக்கொண்டார்! -
வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி சென்ற வருடம் நவம்பர் 8ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது; இது கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கெதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று அறிவித்தார். மேலும், இது நாட்டில் உள்ள பணக்காரர்களை அழவைக்கும் நடவடிக்கை என்றும் அவர் சொன்னார். இன்றோடு அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி கறுப்புதினம் என அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நம்மிடம்,

கறுப்புப்பணம் ஒழிந்துவிட்டதாக சொல்கிறீர்கள்.. எவ்வளவு ஒழிந்தது?


 17.7 லட்சம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக்
கண்டுபிடித்திருக்கிறோம். இதில் 23.22 வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ.3.6 லட்சம் கோடி சந்தேகத்திற்குரிய பணமாக கண்டறியப்பட்டுள்ளது. இது இல்லாமல் 4.7லட்சம் பரிவர்த்தனைகளின் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.29 ஆயிரத்து 213 கோடி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1626 கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதுமாதிரி கணக்கில் காட்டப்படாத, முறையாக வரி செலுத்தாத பணமும், பரிவர்த்தனைகளும் கறுப்புப் பணத்தில்தானே சேரும். இந்த கணக்குகள் கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒட்டுமொத்த நடவடிக்கையும் முடியும்போதுதான் இன்னும் தெளிவான கணக்கு சொல்லமுடியும். அதேபோல, இதுவரை ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல ரெய்டுகளின் விவரங்கள் உறுதிசெய்யப்படவில்லை. அதனால், நாங்கள் தற்போதைய நிலவரப்படி கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.29ஆயிரம் கோடி என கணக்கு காட்டுகிறோம்.

ஒருவேளை இத்தனை லட்சம் கணக்குகளில் நடந்துள்ள பரிவர்த்தனையில் வருவாய்-வரி முரண்பாடு இருக்கும்பட்சத்தில் அதுவும் கறுப்புப்பணமாகவே கருதப்படும். இதெல்லாம், அரசின் நடவடிக்கையின் வாயிலாக சொல்லப்படும் கணக்குகளே. ஒரு நிறுவனம் ரூ.2484 கோடி பணத்தை வங்கியில் செலுத்தி, மீண்டும் வெளியில் எடுத்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும், 2.24 லட்சம் போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. 50 லட்சம் புதிய வங்கிக்கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டரை கோடி தொழிலாளர்களின் வைப்புத்தொகை வங்கிக்கணக்கில் வந்திருக்கிறது. அரசின் நேரடி பலன்கள் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்படுவது மாதிரி மாற்றப்பட்டுள்ளன. புதிதாக வரிசெலுத்துவோர் 26.6%ஆக உயர்ந்துள்ளது. வருமான வரி பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 27.97%ஆக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவத்தனை 58% உயர்ந்துள்ளது. இதெல்லாம் கறுப்புப்பண ஒழிப்பின் சாதனைகள்தானே.

டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையால் ஏழைகளுக்கு என்ன பயன்?

அதனால்தான் ஏழை மக்களுக்கு மானியத்தொகை அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.7லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப்பெரிய தொகையை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஏழை மக்களின் வங்கிக்கணக்குகளில் அரசு பணம் போடவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த ஏழை மக்களும்தானே பயனடைகிறார்கள். எல்லோருக்கும் வீடு கொடுக்கும் திட்டம் ஏழைமக்களுக்கானது தானே. சமூக நலத்திட்டங்களும், மானியத் திட்டங்களும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக பார்க்கப்பட வேண்டியது.

நாட்டின் பொருளாதாரம் 7.7%-ல் இருந்து 5.7%-ஆக குறைந்துள்ளதே..

பொருளாதார வளர்ச்சியில் சரிவு இருக்கும் என இந்திய அரசு சொல்லியிருந்தது. அதேபோல, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சிரமங்களைப் பொருத்துக்கொள்ள வேண்டும் - உங்கள் வேதனைகளை நான் அறிகிறேன் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் 50 நாட்கள்தானே அவகாசம் கேட்டார்?


ஆம்.. கட்டாயமாக சொன்னார்..

ஆனால், பணப்புழக்கம் இன்னமும் சீராகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே..

பணம் வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், பிரதமர் கஷ்டப்படுத்துவதாக சொல்லுவீர்களா? ஏழைகளாகவே இருந்தாலும், உங்கள் பணத்தை வங்கியில் செலுத்தி 50 நாட்களில் எடுத்துக்கொள்ளலாம் என்றுதானே சொன்னார் பிரதமர்.



ரியல் எஸ்டேட், கட்டிடப்பணிகள் முடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறதே..

ரியல் எஸ்டேட்டில் விலை அதிகமாகும்போது பொதுமக்களால் வாங்க முடியவில்லை என குற்றச்சாட்டு வைக்கும் நீங்கள்தான், ரியல் எஸ்டேட்டில் விலை குறைந்தால் தொழில் முடக்கம் என்கிறீர்கள்.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மையா? பொய்யா?

மக்களுக்கு வங்கிகளில் பணப்பரிவர்த்தனையின் போது தொடக்கத்தில் இருந்த சிரமத்தை நாங்கள் அறிகிறோம். அதை பிரதமரும் ஒப்புக்கொண்டார். நாங்கள் இதை மறுக்கவில்லை. ஆனால், இத்தனை கோடி கணக்கில் காட்டப்படாத பணத்தை எல்லாம் பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளுக்குக் கொண்டு வந்திருக்கிறாரல்லவா மோடி. இதனால் பல விதங்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். ஆக, இதையெல்லாம் ஒட்டுமொத்த பலன்களாக பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட பணமதிப்பு நடவடிக்கையாக பார்க்கக்கூடாது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக நவ.8ம் தேதி எதிர்கட்சிகள் பேராட்டடம் நடத்தியிருக்கிறதே...

ஒரேயொரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் அவர்கள் ஊழல் செய்துவிட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.  ஆனால், இன்று மோடி இத்தனை லட்சம் கறுப்புப்பணத்தை வங்கிகளுக்குக் கொண்டுவந்துவிட்டார் என்று இன்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன. மக்கள் இதை புரிந்துகொள்ளட்டும்.

- வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்