Skip to main content

நட்புடன் கட்டியணைப்பது ஒரு குற்றமா?

Published on 22/12/2017 | Edited on 22/12/2017

மாநிலம் ‘தழுவிய’ போராட்டம்! 

மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள்


நட்புடன் கட்டியணைப்பது ஒரு குற்றமா?

கேரள மாநிலம் முக்கோலாக்கல் செய்ண்ட் தாமஸ் சென்ட்ரல் ஸ்கூல் அப்படித்தான் சொல்கிறது. பாராட்டும்நோக்கில் கட்டியணைத்ததற்காக, ஒரு மாணவனையும் ஒரு மாணவியையும் வெளியேற்றியிருக்கிறது பள்ளி நிர்வாகம். மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டும், கடந்த ஐந்து மாதங்களாக அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கிறது.

செய்ண்ட் தாமஸ் சென்ட்ரல் ஸ்கூலில் ஜூலை 21-ல் கலைவிழா ஒன்று நடைபெற்றது. இசைப் போட்டியொன்றில் கலந்துகொண்ட பதினொன்றாம் வகுப்பு மாணவி, அமெரிக்கப் பாடகர் ஜான் லெஜண்டின் ஆல் ஆப் மி பாடலை அசத்தலாகப் பாடிவிட்டு மேடையிறங்கிவருகிறார். அதே பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பாடலை சிறப்பாகப் பாடியதாகக் கூறி தன் பாராட்டைத் தெரிவிக்கும்விதமாக மெதுவாக அவளைக் கட்டியணைக்கிறார். இரண்டு நொடிகூட நீடிக்காத அந்த அணைப்பு அப்படியே போயிருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த தழுவலை ஆசிரியர்கள் பார்த்துவிட்டனர்..

அந்த மாணவியை அவளது பெற்றோரை அழைத்துவரச் சொன்னது பள்ளி நிர்வாகம். அம்மாவுடன் பள்ளி வந்த மாணவியை, பள்ளியின் செயலாளர் ராஜன் வர்கீஸ் நடத்திய விதத்தில் இருவரும் கூனிக் குறுகிப் போய்விட்டனர். “அந்தப் பையன்தான் என்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தான் எனச் சொன்னால் என்னை பள்ளியைவிட்டு அனுப்பமாட்டோம் என்று சொல்லிப்பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. இந்த பிரச்சனையால் என்னை வேறு பள்ளியில் சேர்க்க அப்பா முயன்றபோது, அதையும் அந்தப் பள்ளி நிர்வாகம் தடைசெய்தது. இந்தாண்டு படிப்பே வீணாகிவிட்டது” என்கிறார் சோகத்துடன்.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த அவர், இந்தாண்டுதான் இந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தார். பேஷன் மற்றும் ஜுவல்லரி டிசைனராக வரவேண்டுமென்பது அவரது கனவு. அந்த மாணவனுடான போட்டோவை பதிவிட்டிருந்ததற்காக மாணவியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை முடக்குவதுவரை போயிருக்கிறது பள்ளி நிர்வாகம். பள்ளியின் நடவடிக்கைகளால் அவர் மனம்நொறுங்கிப் போயிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், மாணவியைப்போல் சும்மா இருந்துவிடவில்லை. தன் மகனை பொலிகாளை எனச் சொல்லி பள்ளி அவமானப்படுத்தியது, சக மாணவர்களுடன் தேர்வெழுத அனுமதிக்காமல் தனியாக பள்ளி நூலகத்தில் வைத்து தேர்வெழுதச் சொன்னது, பள்ளிப் பேருந்தில் ஏற்றாதது உள்ளிட்ட விவரங்களை மனித உரிமை கமிஷனில் முறையிட்டனர். நடந்ததை விசாரித்த மனித உரிமை கமிஷன் மாணவனை திரும்பவும் சேர்த்துக்கொள்ளும்படி உத்தரவிட்டது. ஆனால், நிர்வாகமோ அந்த உத்தரவுக்கெதிராக உயர்நீதிமன்றத்தை அணுகியது. மாணவர்களின் ஒழுக்கத்துக்கு பிரின்ஸிபால்தான் பொறுப்பு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியது. என்றாலும், 11-ஆம் வகுப்பு தேர்வுஎழுதும் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கனிவுடன் அணுகுமாறு கூறியது.

உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, ஜனவரி 3-ஆம் தேதி பெற்றோருடன் வந்து தன்னைப் பார்க்குமாறு பள்ளி பிரின்சிபாலான செபாஸ்டியன் ஜோசப் கூறியிருக்கிறார்.

எனினும் மாணவனின் பெற்றோர், “இப்போதும் என் மகனை பள்ளியில் அனுமதிக்கப்போவதாக நிர்வாகம் கூறவில்லை. சந்திப்புக்கு அழைத்திருக்கிறது. அனுமதித்தால் இருவரையும் பள்ளியில் அனுமதிக்கவேண்டும். அந்த அப்பாவிப் பெண்ணை அம்போவென விட்டுவிட்டுப் போகமுடியாது. இல்லையெனில் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றிருக்கின்றனர்.

பள்ளிக்கூடம் இருவரையும் ஏக கெடுபிடியுடன் அணுகினாலும். சமூகம் கனிவாகவே அணுகியிருக்கிறது. கேரளாவிலும் கேரளாவுக்கு வெளியிலும் இருவருக்கும் ஆதரவு குவிந்துவருகிறது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 2,400 பேர் பள்ளி நிர்வாகம் தன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென ஆன்லைன் பெட்டிஷன் கொடுத்திருக்கின்றனர்.

ஜனவரி 3, காலை 9 மணிக்கு “லெட் அஸ் ஹக் பார் பெட்டர் ஜெனரேஷன்ஸ், பெட்டர் டீச்சர்ஸ்” என முகநூல் வழியாக திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்வை சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கமோ ட்விட்டரில், தழுவுவது குற்றமல்ல. உங்களது நண்பனையோ அல்லது நண்பியை அணைத்தபடியிருக்கும் புகைப்படமெடுத்து @pinklungy என்ற பெயரில் பகிரச் சொல்கிறார்கள்.

பள்ளி வளாகத்தில் ஒரு எச்சரிக்கையோடு முடித்திருக்கவேண்டிய விஷயத்தை, நீதிமன்ற படியேறுமளவுக்கு கொண்டுவந்திருக்கிறது பள்ளி நிர்வாகிகளின் தன்முனைப்பு.

- க.சுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்