Skip to main content

சிதைகிறது மோடியின் இமேஜும், பில்டப்பும்!

Published on 20/11/2017 | Edited on 20/11/2017
சிதைகிறது மோடியின் இமேஜும், பில்டப்பும்!

மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக்குவதற்காக பாஜக நடத்திய போலி ஆய்வு முடிவுகளும், எக்ஸ்ட்ரா பில்டப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல...

2014 தேர்தலுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மோடிக்கு சிக்ஸ் பேக் இமேஜுக்காக காற்றடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவருக்கு தலைமுடி நடும் வேலையிலிருந்து, பல வேலைகளுக்கு அதானியும் அம்பானியும் பணம் செலவழிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

எல்க்ட்ரானிக்ஸ் மீடியாக்களில் பணம் கொடுத்து ஆட்களை தயார்செய்து தினமும் மோடி புகழ்பாடும் பதிவுகளை பல்வேறு நாடுகளில் இருந்து பரப்பத் தொடங்கினார்கள்.

மோடியின்  மாநிலமான குஜராத்தின் வளர்ச்சி என்று உலகின் மிகச்சிறந்த கட்டமைப்புகளை போலியாக வெளியிட்டார்கள்.

இந்த பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி சரியாக கணிக்கவில்லை. அதுமட்டுமின்றி அந்த பொய்ப்பிரச்சாரங்களுக்கு சரியான பதிலடியும் கொடுக்கவில்லை.



இதன் விளைவாக மோடியின் இமேஜ் தங்குதடையின்றி 56 இன்ச் மார்பு கொண்ட சிக்ஸ் பேக் லெவலுக்கு விறுவிறுவென்று உருவாக்கப்பட்டு நம்பவும் வைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோடியின் கட்டமைக்கப்பட்ட இமேஜ் சிதையத் தொடங்கியிருக்கிறது.

மோடி வந்தால் இலங்கை பயந்துரும். இந்திய மீனவர்களை தொடக்கூட முடியாது...

பாகிஸ்தான் அப்படியே பயந்து பதுங்கு குழிக்குள் போய் படுத்துவிடும்...

பயங்கரவாதிகளின் பாச்சா மோடியிடம் பலிக்காது...

சீனா இந்தியாவைச் சீண்டிப் பார்க்க முடியாது...

கருப்புப்பணத்தை பிடித்து, இந்தியர் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவார்...

மோடியைப் பற்றிய இந்த பில்டப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன. எனவேதான், மோடியே தன்னைப்பற்றி புதிய பில்டப்புக்குத் தயாரானார்.

புதிய இந்தியாவைப் பெற்றுத் தரப்போவதாக புதிய பிரச்சாரத்தை தொடங்கினார்...

தூய்மை இந்தியா என்று சொல்லிவிட்டு, எல்லோரும் கக்கூஸ் கட்டுங்கள் புதிய இந்தியா பிறக்கும் என்றார்....

உடனே, குஜராத்தில் பொது இடங்களிலும், ரயில்வே தண்டவாளப் பாதை ஓரங்களிலும் ஆய் போகிறவர்களின் படங்களைப் போட்டார்கள்...

ஆகா, குஜராத்தின் நிலமை இதுதானா என்று இந்தியா முழுக்கப் பேசினார்கள்...

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்...

வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் வரிசையில் மக்களை நிற்க வைத்த பரிதாப இந்தியாவைத்தான் மக்கள் பார்த்தார்கள்...

ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்...

விலைவாசியை பல மடங்கு உயர்த்தி நொந்துபோன இந்தியாவைத்தான் பார்க்க முடிந்தது...

தனது முடிவுகளால் தானே தன்னை அம்பலப்படுத்திக்கொண்ட அரியவகை மனிதராக மாறி இந்தியருக்கு நகைச்சுவை பாத்திரமாக மாறிவிட்டார்...

சொந்த மாநிலத்திலேயே தேர்தலை சந்திக்க சி.டி.களை வெளியிடும் கேடித்தனங்களை பாஜக செய்ய வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது.

இந்நிலையில்தான், மீண்டும் மோடியின் இமேஜை பில்டப் செய்ய புதிய ஆய்வுகளை அவ்வப்போது வெளியிடுகிறார்கள்...

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ என்ற நிறுவனத்தின் ஆய்வு என்று ஒன்றை வெளியிட்டார்கள். அதில் மக்களின் அபிமானம் பெற்ற தலைவராக மோடிக்கு 88 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறப்பட்டது. அதே ஆய்வில் ராகுலுக்கு, 58 சதவீதம் பேரும், சோனியாவுக்கு 57 சதவீதம் பேரும், கெஜ்ரிவாலுக்கு 39 சதவீதம் பேரும் வாக்களித்ததாக கூறப்பட்டது.

பாஜகவில் மோடியை மட்டும் குறிப்பிடும் ஆய்வு, காங்கிரஸில் ராகுல் அல்லது சோனியாவை மட்டும்தானே குறிப்பிட வேண்டும்? காங்கிரஸ் ஆதரவாளர்களை ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விவரமானவர்கள் கேட்கத்தானே செய்வார்கள்? இதுதான் பில்டப் என்பது...

அதுபோலத்தான் இப்போது, உலகப் பொருளாதார மன்றம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் நம்பகத்தன்மையான அரசுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆம், தனக்காக செலவழித்த கார்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி இருக்கிறார் என்பது உண்மைதான் என்று மக்கள் சிரிக்கிறார்கள்...

இந்தப் பில்டப்புகளுக்கு சரியான பதில் சொல்லும்படி வாட்டர் எய்ட் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அடிப்படை கழிவறை வசதி இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அது கூறியிருக்கிறது.

அப்பாட, இதிலாவது இந்தியாவை மோடி முதலிடத்துக்கு கொண்டு வந்தாரே என்று சந்தோஷப்படலாம்...

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்