Skip to main content

ஓரிரு தினங்களில் வேட்பாளர் அறிவிப்பு: வானதி சீனிவாசன் பேட்டி

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
ஓரிரு தினங்களில் வேட்பாளர் அறிவிப்பு: 
வானதி சீனிவாசன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார். இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும். பிரபலமான வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., திராவிடக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் குரல் எழுப்பி வருகிறது. வேட்பாளர் கிடைக்காமல் பாஜக திணறி வருகிறது என்றும், அதனால்தான் வேட்பளாரை அறிவிக்க தாமதம் ஆகிறது என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டோம்.

வேட்பாளரை பா.ஜ.க. எப்போது அறிவிக்கும்?

ஓரிரு தினங்களில் அறிவிக்கும்.

தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக, அதிமுகவிலும் அதே வேட்பாளர்கள் போட்டியிடும்போது பாஜக வேட்பாளரான கங்கை அமரன் ஏன் போட்டியிடவில்லை?

அவருக்கு உடல் நிலை சரியில்லை. 

மாநில நிர்வாகிகளில் உங்களைப் போன்ற பிரபலங்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவரை நிறுத்தலாமே? அதில் என்ன தயக்கம்?

இன்று மாலை அல்லது நாளை அறிவித்துவிடுவார்கள். அதுவரை பொறுத்திருங்கள். எந்த தயக்கமும் இல்லை

ஆர்.கே.நகரில் கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்படாமல் நடந்திருந்தால் பாஜக எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கும்?.

வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடும். அதற்காக இவ்வளவு ஓட்டுகள் வாங்குவோம், அவ்வளவு ஓட்டுகள் வாங்குவோம் என்பது யூகங்கள். இதுபோன்ற யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. 

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை வந்துவிட்டது. அவர்கள் ஏன் தினரகனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கக் கூடாது என எதிர்க்கிறார்கள்?.

தொப்பி சின்னம் ஆர்.கே.நகரில் பிரபலமாகிவிட்டது. அதில் பணப்பட்டுவாடா ஆகியிருக்கிறது என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அதனால அந்த சின்னம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்குத்தான் இறுதி அதிகாரம் இருக்கிறது. முடிவு எடுக்கட்டும் என கூறினார். 

வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்