Skip to main content

தலைவிரித்தாடிய ஜெயாவின் ஊழலும், திமுகவில் இரண்டாவது பிளவும்!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017


1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்ததால் கலைக்கப்பட்ட பிறகு,  14 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி கலைஞர் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சியை அமைத்தது.

திமுக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே வைகோ திடீரென காணாமல் போனார். பிப்ரவரி 6 ஆம் தேதியிலிருந்து அவர் தமிழகத்தில் இல்லையென்ற செய்தி பரவியது. இலங்கை வடகிழக்கு பகுதிக்கு இந்திய இறையாண்மையை மீறி, சட்ட விரோதமாக விடுதலைப் புலிகளைச் சந்திக்க வைகோ போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பரபரப்பாகியது.

வைகோவின் இந்த காரியம் திமுக அரசுக்கும், முதல்வர் கலைஞருக்கும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கலைஞரை துளைத்தெடுத்தன. கலைஞரோ, வைகோ பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையோடு பதிலளித்தார்.

வைகோ தமிழகம் திரும்பி, அறிவாலயத்துக்கு வந்தார். தனது பயணம் குறித்து செய்திளார்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என்றார். ஆனால்,  அறிவாலயத்துக்கே செய்தியாளர்களை வரவழைத்து பேட்டி கொடுத்தார் வைகோ.

இதையடுத்து சுப்பிரமணியன்சாமி வைகோவின் பயணத்தை திமுக அரசுக்கு எதிராக திருப்பினார். இந்திய அரசின் பாதுகாப்பு ரகசியங்களை விடுதலைப்புலிகளுக்கு திமுக அரசு கடத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். அவருக்கு ஜெயலலிதாவும் உதவியாக இருந்தார்.






இந்நிலையில்தான் வி.பி.சிங் தலைமையிலான ஜனதாதளம் கட்சியுடன் தெலுங்குதேசம், திமுக, அசாம் கனபரிஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அது தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக பாஜகவும், கம்யூனிஸ்ட்டுகளும் ஆதரிக்கிற அரசாங்கத்தை 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி வி.பி.சிங் அமைத்தார்.

தமிழகத்தில் திமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதிகூட கிடைக்காவிட்டாலும் முதல்முறையாக மத்திய அரசாங்கத்தில் முரசொலி மாறனுக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தார்.

இதை வைத்து வைகோவை திமுகவுக்கு எதிராக இந்திய உளவுத்துறை பயன்படுத்தத் திட்டமிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

இந்திய அமைதிப்படை இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தோடு இணைந்து பெண்களை கற்பழித்ததாகவும், தமிழர்களை துன்புறுத்துவதாகவும் ஏராளமாக புகார்கள் வந்தன. இதையடுத்தே கலைஞர் வற்புறுத்தல் காரணமாக பிரதமர் வி.பி.சிங் இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றார்.

சென்னை திரும்பிய இந்திய ராணுவத்தை முதல்வர் என்ற வகையில் கலைஞர் வரவேற்கச் செல்லவில்லை. தமிழர்களை கொன்று குவித்துவிட்டு திரும்பும் ராணுவத்தை நான் வரவேற்கச் செல்ல மாட்டேன். இதனால் அரசுக்கு ஆபத்து என்றாலும் கவலையில்லை என்று கூறினார் கலைஞர்.

இதையெல்லாம் திமுக அரசுக்கு எதிராக பயன்படுத்தினார் சுப்பிரமணியன் சாமி. தமிழக கடல் எல்லை வழியாக விடுதலைப்புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.






இந்தக் காரணங்களைக் காட்டித்தான் திமுக அரசாங்கத்தை கலைக்கும்படி ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், தேசியமுன்னணி அரசாங்கம் 1990 நவம்பரில் கவிழ்க்கப்பட்டவுடன், சந்திரசேகர் தலைமையிலான பொம்மை அரசாங்கத்தின் உதவியால்தான் திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் கவிழ்க்கப்பட்டது.

அதன்பிறகு 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில்தான் ராஜிவ் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜிவ் கொலைக்கான காரணம் பலவாறாக சொல்லப்பட்டாலும் இந்திய அமைதிப் படையால் தமிழ் ஈழப் போராட்டத்துக்கு ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணமாக கூறப்பட்டது.

"நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க மீண்டும் இந்திய அமைதிப்படையை அனுப்புவேன்" என்று 1990 ஆகஸ்ட் 21-28 தேதியிட்ட சண்டே பத்திரிகையில் ராஜிவ் கூறியிருந்தார். இதுதான் அவரை புலிகள் கொலை செய்ய காரணம் என்றும் கூறப்பட்டது.

ராஜிவ் காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக இருந்ததாகவும், அந்த ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்களே சீர்குலைத்தனர் என்றும் வர்மா கமிஷன் அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்கவே அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மறுத்தார். பின்னர் கடுமையான விமர்சனங்கள் காரணமாக அதை ஏற்றார். ஆனாலும், கமிஷனில் கூறப்பட்ட பரிந்துரைகள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தது என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது[3].

நரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ் எடுக்கப்படவில்லை.

ராஜிவ் கொலைக்கு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதமே காரணம். அக்டோபர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான ஒரு கப்பலில் 12 புலிகள் தற்கொலை செய்துகொள்ள ராஜிவ் அரசே காரணம் என்று பிரபாகரன் கருதினார். அமைதிப்படையை திரும்ப்பெறும்படி உண்ணாவிரதம் இருந்த திலீபன் மரணம் அடையவும் ராஜிவ் அரசே காரணம் என்று பிரபாகரன் நினைத்தார். எனவேதான் ராஜிவை கொல்லும் ஒரே நோக்கத்தில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று விசாரணை முடிவுகள் கூறின.

மொத்தத்தில் ராஜிவ் கொலைக்கும் திமுகவுக்கு துரும்பளவு தொடர்பு இருப்பதாகக்கூட கூறப்படவில்லை. ஆனால், ராஜிவை கொன்றது திமுக என்று பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு காங்கிரஸும் அதிமுகவும் சேர்ந்து, திமுகவை தோற்கடித்தார்கள்.

அப்படி ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, தமிழ்நாட்டையே மிரள வைத்தார். ஆடம்பரம் அதிகாரம் தூள் பறந்தது. முதலமைச்சர் வீட்டில் குளிக்கும்போதே அவர் போகிற பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலைமை இருந்தது.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே 1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகம் வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விழாவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகாமக குளத்தில் இருவரும் நடத்திய கூத்துக்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.





இருவரும் கணவன் மனைவிபோல மாலை மாற்றிக்கொண்டு, ஒருவர் தலையில் மற்றவர் குளத்து நீரை ஊற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக குளத்திலேயே மிதிபட்டும் மூ்சசுத்திணறியும் பலர் உயிரிழந்தனர். மக்கள் உயிரிழந்த நிலையிலும் இருவரும் குளிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.

இந்த நிகழ்வு பற்றி பத்திரிகைகளும் மீடியாக்களும் செய்தி வெளியிட்டும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அதிகாரத்தை பிரயோகித்தார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கப்பட்டனர். சந்திரலேகா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது. வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். ஆடிட்டர்கள் தாக்கப்பட்டனர். கஞ்சா வழக்கு, ஹெராயின் வழக்கு பிரபலமானது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷன், ஜெயலலிதா ஆட்சிக்கு வர உதவிய சுப்பிரமணியன் சாமி என்று யாரும் விட்டு வைக்கப்படவில்லை.

சசிகலாவின் சொந்தக்காரர்கள் அனைவரும் ஜெயலலிதா வீட்டில் குடியேற்றப்பட்டனர். ஜெயலலிதா அதிகார போதையில் கண்ணில் பட்டதையெல்லாம் விலை பேசினார். அரசு சொத்துக்களையும் விட்டு வைக்கவில்லை. மன்னார்குடி ஆட்கள் தமிழகத்தில் தங்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் ஜெயலலிதாவின் பேரில் வாங்கிக் குவித்தனர்.

ஜெயலலிதாவின் ஆடம்பர ஆணவ ஆட்சிக்கு எதிர்ப்பு வலுவாகி வந்த நேரம். திமுகவில் வைகோ விவகாரம் பூதாகரமாகியது. 1989 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திமுக மீண்டும் ஆட்சியை இழக்க வைகோவின் ஈழப் பயணமும், விடுதலைப் புலிகளின் சதியுமே காரணம் என்று திமுக முன்னணி தலைவர்கள் கருதினர்.

வைகோவின் ஈழப்பயணம் திமுகவில் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வைகோவும் திமுக தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ரகசியத் தகவல்கள் வெளியாகின்.

வைகோவின் நிகழச்சிகள் குறைக்கப்பட்டன. அவரை வைத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமைக்கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையும் மீறி, திமுகவின் உள்கட்சி தேர்தலில் வைகோவை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடச் செய்யும் முயற்சியில் சில மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக இருந்தனர்.

அவர்களுடைய முயற்சியை அறிந்த கலைஞர் வைகோவையும் அவரை ஆதரிக்கும் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், கலைஞருக்குப் பதிலாக திமுகவை கைப்பற்ற வைகோவுக்கு விடுதலைப்புலிகள் உதவுவதாக செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலையும் கலைஞர் வெளியிட்டார்.

ராஜிவைக் கொன்றதன் மூலம் இந்தியாவில் ஒருமித்த ஆதரவு பெற்ற தலைவர்கள் உருவாகாமல் செய்துவிட்டனர். அடுத்து திமுகவின் தலைமையை தமக்கு வேண்டிய வைகோ கைப்பற்றிவிட்டால், தமிழகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம் என்று புலிகள் திட்டமிடுவதாக உளவுத்துறை தெரிவித்தது.

இது எல்லாமே, வைகோவை பயன்படுத்தி திமுகவை பிளக்க உளவுத்துறை கையாண்ட திட்டம் என்றும் கூறப்பட்டது. எப்படியானாலும், திமுக இரண்டாவது முறையாக பிளவுபட்டது. ஒரு மிகப்பெரிய இளைஞர் கூட்டமும், எட்டு மாவட்டச் செயலாளர்கள், ஏராளமான ஒன்றியச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என்று வைகோவுடன் கைகோர்த்தார்கள்.

திமுக அவ்வளவுதான் என்று நினைக்கும்படி பரபரப்பானது. வைகோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

இந்த நிலையில்தான், 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார். சசிகலாவின் அக்கா மகனான 30 வயது சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். உடனே, அவருக்கு சிவாஜியின் மகள் வழிப் பேத்தியை பெண் கேட்டார். சிவாஜி எதுவுமே சொல்லாமல் ஒப்புக்கொண்டார்.





இந்த திருமணத்தை வைத்தே பல்வேறு ஜவுளி முதலாளிகளும், பாலு உள்ளிட்ட நகைக்கடை அதிபர்களும் போண்டியாக்கப்பட்டதாக கூறப்பட்டது. பாலு தற்கொலை செய்துகொண்டார்.

வளர்ப்பு மகனின் திருமணம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது. ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்கச்சரிகையால் இழைக்கப்பட்ட பட்டுப்புடவை அணிந்து, நடமாடும் நகைக்கடையாக ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.

ஏற்கெனவே, ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளை தொடர ஆளுநர் சென்னாரெட்டியிடம் அனுமதி பெற்று வழக்குகளையும் தொடர்ந்திருந்தார் சுப்பிரமணியன் சாமி.

மக்கள் மத்தியில் வெறுப்பு குவிந்திருந்தது. திமுக இரண்டாக பிளந்திருந்தது. தன்னை எதிர்க்க பலமான எதிரி இல்லை என்று ஜெயலலிதா நினைத்திருந்தார். காங்கிரஸையே விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் 1996 ஆம் ஆண்டு மக்களவைக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

(ஜெயலலிதாவின் வீழ்ச்சி, திமுகவின் வெற்றி, ஐக்கிய முன்னணி அரசு பற்றி திங்கள்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர்சோழன்

சார்ந்த செய்திகள்