Skip to main content

காங்கிரஸை ஒழித்தது திமுக!

Published on 09/11/2017 | Edited on 10/11/2017


 

காங்கிரஸ் கட்சியில் பதவிமோகம் தலைவிரி்த்தாடியது. கட்சி வளர்ச்சி பின்தங்கியது.  கட்சிப்பணிகளை விரைவுபடுத்த மூத்த உறுப்பினர் அனைவரும் அரசுப் பதவிகளில் இருந்து  விலக வேண்டும் என்று காமராஜ் யோசனை தெரிவித்தார். அதன் அடிப்படையில் 1963 ஆம்  ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

அதைத் தொடர்ந்து தனக்கு நம்பிக்கையான காமராஜரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேரு முன்மொழிந்தார். காமராஜர் பதவி விலகியதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக எம்.பக்தவச்சலம்  பொறுப்பேற்றார்.

1964ல் பிரதமர் நேரு மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து வலதுசாரி பிற்போக்குவாதியான மொரார்ஜிதேசாய் பிரதமராக விரும்பினார். ஆனால், காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்து அவரையே பிரதமராக தேர்ந்தெடுக்கச் செய்தார்.

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு சாஸ்திரியும் ஒரு உறுதியளித்தார். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற நேரு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படும் என்று சாஸ்திரி கூறினார்.

ஆனாலும், தமிழக சட்டமன்றத்தில் 1964 மார்ச் 7 ஆம் தேதி மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம்.பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மும்மொழி திட்டத்தை பள்ளிகளில் கற்பிக்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பை தீவிரமாக்கியது.

அரசியல் சட்டத்திருத்தத்தின்படி இந்தி அலுவல் மொழியாக மாறும் நாளான 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சம் மேலோங்கியது.

எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை பெருகி போராட்டச் சூழல் உருவானது. ஜனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். 

அவர்களில் பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு.துரைசாமி, சேடப்பட்டி ஆர்.முத்தையா, துரைமுருகன், கே.ராஜா முகமது, நாவளவன், எம்.நடராஜன் மற்றும் எல்.கணேசன் ஆகியோர் முக்கியமானவர்கள். 

இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் ஜி.டி.நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார்போன்றோர் நிதியுதவி அளித்தனர். 

17 சனவரி அன்று, திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இந்தியைத் தீவிரமாக ஆதரித்து, 1937ல் தந்தை பெரியார் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற காரணமாக இருந்த, ராஜாஜி (சுதந்திராக் கட்சி), நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். 

மாநாட்டில் பேசிய ராஜாஜி அரசியலமைப்பின் 17 ஆவது பகுதியைக் "கிழித்து அரபிக்கடலில் போட வேண்டும்" என்று முழங்கினார். 

அண்ணாவோ, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளை துக்கநாளாக அனுசரிக்கும்படி அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒருவாரம் தள்ளிப்போடுமாறு கோரிக்கை விடுத்தார். அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது.

நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்யும் வகையில் முதல்வர் எம். பக்தவத்சலம், குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.







இதையடுத்து, திமுக துக்கநாளை ஒருநாள் முன்கூட்டியே அறிவித்தது. ஜனவரி 25 ஆம் தேதி அண்ணாவும்  3 ஆயிரம் திமுக தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்து காவலில் வைக்கப்பட்டனர்.

திமுகவின் இந்த போராட்டத்தை தந்தை பெரியார் ஆதரிக்கவில்லை. போராட்டக்காரர்களை காலிகள் என்றே அவர் அழைத்தார். பத்திரிகையிலும் எழுதச் சொன்னார்.

மதுரையில் ஜனவரி 25 ஆம் தேதி காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் முடிவில் அரசியலமைப்பின் பதினேழாம் பகுதியை பொதுவெளியில் எரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து "இந்தி ஒழிக", என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.

மதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸார் புகுந்து வன்முறையை தூண்டினர். 7 மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரை முழுவதும் கலவரம் வெடித்தது. காங்கிரஸ் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. இந்தக் கலவரம் தமிழகம் முழுவதும் பரவியது. 

கலவரங்கள் பரவியதும், மாணவர் ஊர்வலங்கள் மீது காவல்துறை தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, பொதுச்சொத்து அழிவு போராட்டம் தீவிரமாகியது. தொடர்வண்டி நிலையங்களிலும் தொடர்வண்டிப் பெட்டிகளிலும் இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன.

முதல்வர் பக்தவச்சலமோ இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார்.

சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி ஆகிய ஐந்து போராளிகள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். தண்டபாணி, முத்து, சண்முகம் ஆகிய மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இரண்டு வாரத்தில் 70 பேர் இறந்தனர் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால்,  ஆனால் 500க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பல ஆயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களின் சேத மதிப்பு ஓரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா, ஆந்திரா காங்கிரஸ் தலைவர் சஞ்சீவரெட்டி, காமராஜர் ஆகியோர் மைசூரில் கூடி இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்று அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அன்றை மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய் இதை ஏற்க மறுத்தார். அவருடைய அறிவிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவே உதவியது.

பாகிஸ்தானுடன் போர் முடிந்து நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில் இந்தியை திணிப்பதற்காக சொந்த மக்களையே பலியாக்கவும் மத்திய அரசு துணிந்தது.

கலவரங்கள் தொடர்ந்தன. மாநில அரசு மாணவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில், மத்திய அரசு ஆங்கிலத்தை அலுவல்மொழியாக தொடர வகை காணப்பட வேண்டும் என்று மத்தி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார். அதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. உடனே, அவர் மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ஓ.வி.அழகேசனுடன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்தே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பின்வாங்கினார். 1965 பிப்ரவரி 11 ஆம் தேதி வானொலியில் உரையாற்றினார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு சில உறுதிகளை வழங்கினார்.
 
அனைத்து மாநிலங்களும் தனது சொந்த மொழியையோ, ஆங்கிலத்தையோ தொடர்பு மொழியாக கொள்ள சுதந்திரம் உண்டு.
 
இரு மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழி ஆங்கிலத்தில் இருக்கும். அல்லது மாநில மொழியுடன் உரிய ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கும்.
 
இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முழு உரிமை உண்டு. இந்த விஷயத்தில் இந்தி பேசாத மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றமும் நிகழாது.
 
மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

இந்திய குடிமையியல் சேவை தேர்வுகள் இந்தியுடன் ஆங்கிலத்திலும் தொடரும் என்று அவர் உறுதி அளித்தார்.

அவருடைய வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை பெற காரணமாக இருந்த சி.சுப்பிரமணியனும், ஓ.வி.அழகேசனும் மீண்டும் அமைச்சர்களாக தொடர்ந்தனர்.

மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் முற்றாக திரும்பப்பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் முற்றாக கைவிடப்பட்டது. தமிழகத்தில் போராட்டம் வெற்றி பெற்றதைத் தாங்க முடியாத ஜனசங்கம், டில்லியில் வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் பெயர்ப் பலகைகளை தார்கொண்டு அழித்து தனது இந்திவெறியை வெளிப்படுத்தியது.

இந்தி எதிர்ப்பு போராட்டம் மெதுவாக காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக மாறத் தொடங்கியது. மத்திய அரசின் பிடிவாதப் போக்கு மாணவர்களையும் தமிழ் உணர்வாளர்களையும் ஆவேசப்படுத்தியது. அவர்களுடைய ஆவேசத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூட மத்திய அரசு மறுத்தது.

அரசியல் அமைப்புப் பகுதி 17ஐ நீக்க வேண்டும் என்றும் அதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் போராட்டம் தொடர்ந்தது.

(தமிழகத்தில் மட்டும்தான் இந்தித் திணிப்புக்கு வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்ததாக இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக திராவிட இயக்கங்கள் இந்தியை கற்பதை தடுத்துவிட்டன என்ற பிரச்சாரம் வலுவாக நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகம் போராட்டத்தில் உக்கிரமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப், மராட்டியம் என பல்வேறு மாநிலங்களும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராகத்தான் இருந்தன என்பதே நிஜமான வரலாறு. தமிழகம் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்தே இந்தித் திணிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது என்பதே உண்மை)

இந்தி எதிர்ப்பு போராட்டத்துடன், மாநிலத்தில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவியது. காமராஜ் முதல்வர் பதவியிலிருந்து விலகி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பக்தவச்சலம் தலைமையில் அரசு தடுமாறியது. உணவுப்பஞ்சம் அரசாங்கத்தின்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.







இந்நிலையில் 1966 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டச் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை மாணவர்கள் நடத்தினார்கள். அதில் கலந்துகொண்ட ராஜாஜி காங்கிரஸ் கட்சியை மாணவர்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒருபக்கம் தீவிரமடைந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் போரும் 20 நாட்களில் முடிவடைந்தது. இருநாடுகள் இடையே உடன்பாடு ஏற்படுத்த சோவியத் ரஷ்யாவின் அதிபர் கோசிஜின் முயற்சி மேற்கொண்டார். இதற்காக மாஸ்கோ சென்ற இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கேயே மரணம் அடைந்தார்.

அதையடுத்து, மீண்டும் மொரார்ஜி தேசாய் பிரதமராக முயற்சி செய்தார். ஆனால், காமராஜர் அந்த முயற்சியை மீண்டும் தடுத்து முறியடித்தார். இந்திரா காந்தியை அவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இந்திரா பிரதமரானார்.

இத்தகைய சூழ்நிலையில் 1967 பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்தின் தொகுதிகள் தற்போதுள்ள 234 என்ற எண்ணிக்கைக்கு வந்தது. 189 பொதுத் தொகுதிகள், தாழ்த்தப்பட்டோரு மற்றும் பழங்குடியினருக்கான 45 தனித் தொகுதிகள் என மொத்தம் 234 தொகுதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  






காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. தந்தை பெரியார் காங்கிரஸை ஆதரித்தார். தமிழகத்தில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது. திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் ஆகியவை திமுக கூட்டணியில்  இடம் பெற்றன. இக்கூட்டணியை உருவாக்குவதில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ராஜஜியும் முக்கிய பங்காற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு கூட்டணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.

காங்கிரஸுக்கு எதிரான மக்கள் மனநிலை கட்சிகள் அனைத்தையும் திமுக தலைமையில் இணைந்து போட்டியிடும் நிலையை உருவாக்கியது. அரிசிப் பஞ்சத்தை திமுக தனது கூட்டணிக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. 
 
தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.
 
வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுக வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம். ஜி. ஆர், நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான மக்கள் மனநிலையையும் அதிகரிக்க உதவியதாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சீர்குலைந்திருந்த நிர்வாகமும், உணவுத்தட்டுப்பாடும், மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையும் ஏற்கெனவே திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி இருந்தது என்பதே உண்மை.





 
தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 76.57 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு 137 தொகுதிகளைக் கைப்பற்றியது. சுதந்திரா கட்சி 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களிலும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 இடங்களிலும், சங்கதா சோசலிஸ்ட் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும், நாம் தமிழர், தமிழரசுக்கழகம் சார்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர்.
 
காங்கிரசு கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 51 இடங்களைக் கைப்பற்றியது. நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களில் தனித்து போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பார்வர்ட் பிளாக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றிபெற்றது.
 
பாரதிய ஜனசங்கம் 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 0.15 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றிருந்தது. 22 ஆயிரத்து 745 வாக்குகள் பெற்றது.
 
திமுக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. அண்ணா இந்தத் தேர்தலில் சட்டமன்றத்துக்கு போட்டியிடவில்லை. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தனித்து 25 இடங்களையும், திமுக கூட்டணி 36 இடங்களையும் கைப்பற்றியிருந்தது.
 
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களையும், வாக்குகளையும் பெற்றது. 518 தொகுதிகளில் 283 தொகுதிகளில் மட்டுமே அது வெற்றிபெற்றது.
 
இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் நிலை தமிழகத்தில் உருவாகியது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது.
 
காங்கிரஸ் அமைச்சரவையில் பூவராகன் தவிர மற்ற அனைவரும் தோல்வி அடைந்தனர். காமராஜர், தனது சொந்த தொகுதியில் பெ.சீனிவாசன் என்ற திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இளைஞரான இவர்தான் இந்தி எதிர்ப்பு மாணவர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவர்.
 
மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் அண்ணாவும் தலைவர்களும் ஈடுபட்டிருந்தனர். திமுகவினருக்கு ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் இல்லை என்பதால் தன்னிடம்தான் வருவார்கள் என்று ராஜாஜி நினைத்திருந்தார். தனது வீட்டில் அண்ணாவின் வருகைக்காக காந்திருந்தார்.
 
ஆனால், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா, இந்த வெற்றியை தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்குவதாக கூறினார். இது ராஜாஜியை மட்டுமின்றி தமிழகத்தையே அதிரச் செய்தது. பெரியாரே அண்ணாவின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்திருக்கவில்லை.
 
திருச்சியில் தங்கியிருந்த தந்தை பெரியார் அண்ணாவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்தார். மிகக் கடுமையாக திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்த தனக்கு அண்ணாவின் அறிவிப்பு நாணத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
 
அண்ணாவும் முன்னணி தலைவர்களும் தந்தை பெரியாரைச் சந்தித்து, திமுக ஆட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.





 
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அண்ணா அதுவரை தமிழகத்தில் திராவிடர் கழகமும், திமுகவும் நடத்திவைத்த லட்சக்கணக்கான சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற கோப்பில் முதல் கையெழுத்தை இட்டார்.
 
தமிழகத்தில் காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கியது. திராவிட இயக்கங்களின் சமூகநீதி பயணம் தொடங்கியது.
 
(தமிழகத்தில் தேர்தல் அரசியலும் அணிமாற்றங்களும் குறித்து திங்கள் கிழமை பார்க்கலாம்)
 
-ஆதனூர் சோழன்


முந்தைய பகுதிகள்:


சார்ந்த செய்திகள்