
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சமீபமிருக்கும் அத்தை கொண்டான் பகுதியை சேர்ந்த லட்சுமணன், சித்ரா தம்பதியருக்கு மகேந்திரன் (16) மாரிச்செல்வம் (12) நாகராஜ் (3) என்று மூன்று மகன்கள். சித்ராவின் கணவர் லட்சுமணன் காலமாகிவிட்டார்.
அத்தைகொண்டானில் தன் மகன்களுடன் வசித்து வந்த சித்ரா இலுப்பையூரணியில் நடந்த உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மகன்கள் மூன்று பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார். காரை இனாம் மணியாட்சியை சேர்ந்த ராஜேஸ்பாண்டியன் (25) என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து நேற்றிரவு அவர்கள் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இளையரசனேந்தல் ரோட்டில் வரும்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராத வகையில் கார் மோதியதில், கார் டிரைவர் ராஜேஸ்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். மோதிய வேகத்தில் கார் நொறுங்கியிருக்கிறது.
படுகாயங்களுடன் சித்ரா, மகேந்திரன், மாரிச்செல்வம், நாகராஜ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காகத் தவித்திருக்கிறார்கள். தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கித் தவித்த தாய் மற்றும் மகன்கள் மூன்று பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி நேற்று சித்ரா, மற்றும் மகன்களான மாரிச்செல்வம், நாகராஜ் மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர். மகேந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகன்கள் உள்பட நான்கு பேர் கோரவிபத்தில் சொந்த ஊரான கோவில்பட்டியருகேயே பலியான சம்பவம் துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.