Skip to main content

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை மறைக்கும் பாஜக!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை மறைக்கும் பாஜக! 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி என்று மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இந்தச் செய்திகள் எந்த அளவுக்கு திரிக்கப்பட்டவை என்பது மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும்.



உ.பி.யில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைத்தான் பாஜக வென்றுள்ளது. இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றியிருக்கிறது.

அதேசமயம், இந்த 16 மாநகராட்சிகளுக்கான 1300 வார்டுகளில் பாஜக வெறும் 535 வார்டுகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள வார்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி 145 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 171 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 86 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள இடங்களை மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி உள்ளன. அதாவது மொத்த வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு வார்டுகளில்தான் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

அயோத்தி மாநகராட்சியை வெறும் 3500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக கைப்பற்றியுள்ளது. அங்கு சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்தில் வந்தது. அதேசமயம் பாபர் மசூதி இருந்த இடத்தை உள்ளடக்கிய வார்டில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வார்டுகளின் நிலைமை இப்படி என்றால், 198 நகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 47ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகஜன் சமாஜ் கட்சி 18 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற இடங்களில் சுயேச்சைகளும் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது மொத்த நகராட்சிகளில் நான்கில் ஒரு பங்கு இடங்களைக்கூட பாஜக கைப்பற்றவில்லை.

மொத்தமுள்ள 5,261 நகராட்சி வார்டுகளில் வெறும் 624 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது 8ல் ஒரு பங்குதான் என்பதை பாஜக மறைக்கிறது. பகுஜன் சமாஜ் 178 இடங்களிலும், சமாஜ்வாதி 328 இடங்களிலும், காங்கிரஸ் 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளை துடைத்தெறிந்துவிட்டதுபோல, ஊடகங்கள் இதையெல்லாம் குறிப்பிட்டுக் காட்டாமல் மேலோட்டமாக மாபெரும் வெற்றி என்று செய்தியைப் பரப்புகின்றன.

அதுபோலவே மொத்தமுள்ள 438 நகரப்பஞ்சாயத்துகளில் பாஜக 81 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 67 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 34 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான இடங்களை சுயேச்சைகளும், கட்சிகளின் போட்டி வேட்பாளர்களும் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஐந்தில் ஒரு பங்கு இடத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் 14 மேயர் பதவிகளை அது பெற்றிருந்தாலும், மாநகராட்சி வார்டுகளை எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி இருக்கிறார்கள். அதுபோலவே நகராட்சிகள், நகரப் பஞ்சாயத்துக்களையும் பெரும்பான்மையாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எல்லாவகையிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், அரசுத் திட்டங்களை கிராம அளவிலும், வார்டு அளவிலும் அமலாக்குவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள். தவிர, மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரப்பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.

இதையடுத்து, அங்கெல்லாம் பாஜகவின் தீர்மானங்களை எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.



மொத்தத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 8 மாதங்களே ஆன நிலையில், அறுதிப்பெரும்பான்மை, அசுர பலத்துடன் சட்டமன்றத்தைக் கைப்பற்றிய பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தல் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

பதிவான வாக்குகள், பாஜகவின் வாக்குச் சதவீதம் ஆகியவையும், எதிர்க்கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் எத்தனை இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் முழுமையாக தெரியவரும்போதுதான் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியின் லட்சணம் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வரும். மோடி சொன்னதுபோல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியா, பின்னடைவா என்பதும் புரியும்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்