
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மத நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரின. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்ட மதநல்லிணக்க பேரணிக்கும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அக்.2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ஆம் தேதி பேரணியை நடத்திக் கொள்ளலாம் அதற்கான அனுமதியை காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்.31 ஆம் தேதி தள்ளிவைத்தார். அக்.31 ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் அடுத்த நாளே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கை தொடரும் என எச்சரித்தார்.
இந்நிலையில் மதநல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தினர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ஆர்எஸ்எஸ் என்பது நாடறிந்த மதவாத இயக்கம். ஏற்கனவே பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்திருப்பதால் இஸ்லாமியர்கள் இடையே எதிர்ப்பு கண்டனங்கள் இருப்பதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்ற தமிழக காவல் துறையின் வாதம் ஏற்புடையது. அரசியல் இயக்கங்களாக ஜனநாயக அமைப்புகளாக இருக்கிற எங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது நியாயம் இல்லை. இதை காவல் துறையின் தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்” என கூறி இருந்தார். மேலும் இந்த பேரணிக்கு பல கட்சிகளை சார்ந்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அக்.11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீ.வீரமணி, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அக்.2ல் அனுமதி வழங்க இயலாதது குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கியதுடன் ஒத்திவைக்கும் படி கேட்டதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.