police

ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

Advertisment

அப்போது போலீசார் ஒருவரை கருப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் பெரும் செய்தியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இளைஞர் காவலரை தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ காட்சிகளை குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். மேலும் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசை தாக்கிய அந்த வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சியை வைத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எண்ணூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் கடந்த மாதம் 31-ந்தேதி போலீசில் சிக்கினார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

மதன்குமார் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.