"வார்த்தைகளுக்குக் கூட வலிக்கக்கூடாது' என எண்ணியோ என்னவோ; மெல்லிய குரலில்தான் பேசுவார் இளையராஜா வின் மகள் பவதாரிணி. அவரின் தோற்றம் கூட காற்றுக்கு ஆடுகிற ரோஜாச்செடி போன்றதுதான். அவரின் குரல் வளமோ, குயிலையும் நாணப்படச் செய்யும்.

Advertisment

i

எத்தனையோ மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருக்கும் பவதாரிணிக்கு "பாரதி' படத்தில் பாடிய "மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் தேசிய விருதை தேடித் தந்தது. "அழகி'யின் "ஒளியிலே தெரிவது நீயில்லயா' பாடல், காதலர்களுக்கு ஊட்டச் சத்து. "வேலை' படத்தை இயக்கிய சுரேஷ், அந்தப் படத்திற்கு இசையமைத்த பவதாரிணியின் தம்பி யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு. அதன் அடிப்படையில்தான் சுரேஷின் உறவினர், பவதாரிணியின் மாப்பிள்ளையானார்.

Advertisment

கணவருடன் இனிய இல்லறம் நடத்தினாலும், "குழந்தையின்மை' பவதாரிணி மனதை கனக்கச் செய்தது. இந்நிலையில் பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சைக்கு ஆட்பட்டார். ஆனால்... மென் மையான அந்தக் குயிலை, மூர்க்கமாகத் தாக்கிவிட்டது கேன்சர். சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... ஆயுர்வேத சிகிச் சைக்காக சில மாதங்களுக்கு முன் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பவதாரிணி. ஆனால் பலன் இல்லை. புற்றுநோயின் தீவிரம் எனப்படும் நான்காவது நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் 25-01-2024 அன்று மாலையில் பாடித் திரிந்த குயில் பவதாரிணி தனது 47 வயதிலேயே மரணமெய்தினார்.

இலங்கையில் பெரும் இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த இளையராஜா, தன் மகள் உயிர்நீத்த நொடியில் அங்குதான் இருந்தார்.

Advertisment

"தான் பெரும் இசைஞானி' என்பதையெல்லாம் விட்டுவிட்டு, பிள்ளைகள் கார்த்திக்ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் மீது பிரியமாக இருப்பார். அதிலும் தன் செல்லமகள் பவதாரிணியின் அன்புக்கு அடிமையாகவே இருந்தார்.

பவதாரிணியின் இழப்பு இளையராஜாவை உறைந்து போக வைத்திருக்கிறது. தன் அன்பான மகள் அமைதியாய் உறங்கட்டும் என, தன் சொந்த மண்ணான பண்ணைப்புரத்தில் தன் மகள் உடலை ஐக்கியப்படுத்தி, சமாதி கோயிலும் ஏற்படுத்துகிறார்.

சோகத்திலும் பெரும் சோகம் புத்திரசோகம். பெற்றவர் இருக்கையில் பிள்ளைகள் மரணம் என்பது பெற்றவரை ரணப்படுத்தும்.

எவ்வளவு பெரிய பக்திமான் இளையராஜா? எத்தனை, எத்தனை பாடல்களை இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பித்திருக்கிறார். எந்த தெய்வமும் இவருக்கு கைகொடுக்கவில்லையோ?

ஊராரின் சோகத்திற்கெல்லாம் ஆறுதலும், தேறுதலும் தந்தது இளையராஜாவே உங்கள் பாடல்கள்!

யார், யாரையோ ஆற்றுப் படுத்தி தேற்றிய உங்கள் பாட்டு... உங்களைத் தேற்றாதா என்ன?

____________________________

அம்மாவின் நினைவிடம் அருகே...

dd

பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இளையராஜா, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முல்லைப்பெரியாறு தொடங்கும் இடமான லோயர் கேம்ப் பகுதியில் ஏழரை ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அதில் தங்குவதற்கு பங்களாவுடன், சிரி குருகிருபா வேத பாடசாலா என்ற வளாகத்தை அமைத்திருந்தார். சொந்த ஊர் பண்ணைபுரம் என்றபோதிலும், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயிக்கு இங்குதான் நினைவிடம் அமைத்திருந்தார். அதன் அருகே, கடந்த 2011-ல் மறைந்த அவரது மனைவிக்கும் நினைவிடம் அமைத்தார். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது இளையராஜா குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் தாய் மற்றும் மனைவியின் நினைவிடத்திற்கு இடையே மகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும் பவதாரிணியின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர். பவதாரிணியின் மரணம் தேனி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

-சக்தி