/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_87.jpg)
நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி எனத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி இன்று முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். இவரது படங்களில் வரும் டார்க் காமெடி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படம் நெல்சனின் முதல் படமாக வெளிவந்த நிலையில் அதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டு சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கிவந்தார். அப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றும் அப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருந்த நிலையில் அப்படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பேச்சு வார்த்தை பணிகளில் தற்போது நெல்சன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெல்சன் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் இருந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது விருப்பமாக இருந்து வருகிறது. எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/32_81.jpg)
ஃபிலமென்ட் பிக்சர்ஸில், பரந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான படங்களை உருவாக்குவதே எங்களின் முதன்மையான குறிக்கோள். எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறோம். மே 3ஆம் தேதி எங்களின் முதல் பட அறிவிப்பு வெளியாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநராக அறிமுகமாகி இப்போது தயாரிப்பிலும் ஈடுபடவுள்ள நெல்சனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)