ரஹானே வெளியே.. நெஹ்ரா உள்ளே.. டி20க்கு தயாராகும் இந்திய அணி!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆசிஸ் நெஹ்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை அபாரமாக வென்றது. இதன்மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்தது.
இதைத்தொடர்ந்து வரும் அக். 7ஆம் தேதி இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஸ் நெஹ்ரா தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தனது மனைவியின் சிகிச்சை காரணமாக விடுப்பில் இருந்த சிகர் தவானும் அணியில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அபாரமாக ஆடி அடுத்தடுத்து அரைசதங்களை விளாசிய ரஹானேவின் இடத்தை பூர்த்தி செய்வார்.
அனுபவுமுள்ள சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ்விற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்த ஒரே அணி என்ற பெருமையை இந்திய அணி கொண்டுள்ளது. அந்த அதிசயம் நடப்பு தொடரிலும் நிகழுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.