Skip to main content

நப்பாசையில் அதிமுக அரசு எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் முறியடித்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018


குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் அதிமுக அரசு எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் முறியடித்திருக்கிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, “குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்”, என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன். மிகக்கொடிய நோயான புற்றுநோயை நுகர்வோரிடம் பரப்பும் குட்கா விற்பனை, அந்த விற்பனையை அனுமதித்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வெட்கமே இல்லாமல் பெற்ற பட்டப்பகல் மாமூல் -லஞ்சம் உள்பட பல அதிர்ச்சித் தகவல்கள் இந்த குட்கா விசாரணையில் வெளிவந்து, பலருடைய முகமூடியைக் கிழித்தெறியும் என்று நம்புகிறேன்.

மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீதான 40 கோடி ரூபாய் ஊழலுக்கும் வித்திட்ட குட்கா ஊழல் வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த விசாரணையை அதிமுக அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்தது. பிறகு மீண்டும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை கோரியபோது அதற்கு ஒப்புக்கொள்ள அடியோடு மறுத்து அதிமுக அரசு எவ்வளவோ வாதாடியது. இறுதியில் தடை செய்யப்பட்ட குட்கா ஊழல் வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நல்ல தீர்ப்பு அளித்தது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தும், அதிமுக அரசு குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை; திட்டமிட்டுத் தாமதித்தது. இந்த இடைவெளியில் தான், சுகாதாரத்துறையில் உள்ள சுகாதார ஆய்வாளர் பதவியிலிருக்கும் சிவக்குமார் என்பவரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் சேர்ந்து தங்களின் பினாமியாக்கி, அதற்கு முதலமைச்சர் பழனிச்சாமியும் ஒத்துழைத்து உதவிசெய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, “குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அமைச்சர், டி.ஜி.பி,முதலமைச்சர் ஆகியோர் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றமே முறியடித்திருக்கிறது.

ஆகவே, குட்கா ஊழல் வழக்கை மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக சி.பி.ஐக்கு அதிமுக அரசு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. அதே முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளாமல் வருமான வரித்துறை தமிழக அரசிடம் கொடுத்த “குட்கா டைரியின்” அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையைத் துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இருவரும் தொடர்ந்து இந்த குட்கா விசாரணைக்கு முட்டுக்கட்டைக்கு மேல் முட்டுக்கட்டைபோட்டு வருவதால், அவர்களை பதவியில் வைத்துக் கொண்டு சி.பி.ஐ. நேர்மையாக விசாரணை நடத்துவது உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வர நிச்சயம் உதவாது.

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்யத் தவறினால்,விசாரணை தடையின்றி நியாயமாக நடைபெற இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. அமைப்பு தமிழக அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்