Skip to main content

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடை செய்யும் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் விதம் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இச்சட்டத்தின்படி கடந்த இரு ஆண்டுகளில் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே அதிர்ச்சிக்கு காரணமாகும்.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரங்கள் தடுப்பு மற்றும் வணிகம், வர்த்தகம், உற்பத்தி, வினியோக ஒழுங்குமுறை) சட்டத்தின் நான்காவது பிரிவின்படி பொது இடங்களில் புகைப் பிடிப்பது குற்றமாகும். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும்.

இந்தியாவில் பொது இடங்களில் அதிக அளவில் புகைப்பிடிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழும் நிலையில், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான இரு ஆண்டுகளில் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா தெரிவித்திருக்கிறார். சமூகத் தீமைகளைக் கட்டுப்படுத்துவதில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு நேரமில்லை என காவல்துறையினர் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கின்றனர். சுகாதாரத்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் செயல்படுவதாகவே தெரியவில்லை. குட்கா ஆலைகளுக்கு அனுமதி தருவது, அதற்காக மாமூல் வாங்குவது ஆகியவை தான் சுகாதாரத்துறை அமைச்சரின் முதன்மைப்பணியாக உள்ளன.

இந்தியாவில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் புகைப் பிடிப்பவர்களை விட பிறர் விட்ட புகையை சுவாசிப்பவர்கள் தான் அதிகம் ஆகும். இதைத் தடுக்க வேண்டியதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நிம்மதியாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியதும் அரசின் கடமை ஆகும். எனவே, பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்க, தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்