
கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் பயணித்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தூர்பேட்டை-சேலம் சந்திப்பு சாலையில் அவர் சென்ற கார் மற்றொரு கார் மீது உரசியது.
இதனை தொடர்ந்து, அன்று நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துவிட்டதாகவும், தருமை ஆதீனத்தின் ஆசி தான் தன்னை காப்பாற்றியது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதுரை ஆதினமும், அவரது ஓட்டுநர் செல்வமும், காரில் இருந்த முஸ்லீம் தான் தங்களை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அந்த சம்பவம் விபத்து எனவும், கொலை செய்வதற்கான முயற்சி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது’ எனக் கூறி அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து, அதிவேகமாக கார் ஓட்டிய புகாரின் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் செல்வம் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், மதுரை ஆதீனத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கார் விபத்து தொடர்பாக புகார் அளிக்கவில்லை என காவல்துறை கூறியதில் உண்மையில்லை என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னுக்குப் பின் முரணாக காவல்துறை அளித்துள்ள அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே அவசர உதவி எண்ணான 100க்கு அழைத்துப் புகார் அளித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.