Skip to main content

பரபரப்பு குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Published on 05/05/2025 | Edited on 05/05/2025

 

Police register case against Madurai Adinam's driver

கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  தருமை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் பயணித்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தூர்பேட்டை-சேலம் சந்திப்பு சாலையில் அவர் சென்ற கார் மற்றொரு கார் மீது உரசியது.

இதனை தொடர்ந்து, அன்று நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “கொலை செய்ய சதி பண்ணிவிட்டார்கள். தருமை ஆதீனத்தின் ஆசி தான் என்னைக் காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் தானே என்னைக் காப்பாற்றினார். இல்லையென்றால் இந்த இடத்தில் நான் இருப்பேனா” என பேசி இருந்தார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதுரை ஆதினமும், அவரது ஓட்டுநர் செல்வமும், கொலை செய்ய சதி நடப்பதாகக் குற்றச்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.

Police register case against Madurai Adinam's driver

இதனையடுத்து, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அந்த சம்பவம் விபத்து எனவும், கொலை செய்வதற்கான முயற்சி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது’ எனக் கூறி அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டனர். 

இந்த நிலையில், அதிவேகமாக கார் ஓட்டிய புகாரின் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் செல்வம் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்