Court questions Why wasn’t police protection provided to sagayam

நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது சட்டவிரோத கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் நியமித்தது. சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக இருந்த அவருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், கடந்த 2021 ஜனவரி மாதம் அவர் விருப்பு ஓய்வு பெற்றார். இதற்கிடையில், சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், சகாயம் வெளியே கொண்டு வந்த சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு தற்போது மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிசகாயம் நேரில் ஆஜராகுமாறு மதுரை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும், மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியிருந்தார்.ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இன்றும் சகாயம் நேரில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனையடுத்து நீதிபதி லோகேஸ்வரன், ‘கிரானைட் குவாரி வழக்கு குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை ஏன் திரும்ப பெற்றுக்கொண்டீர்கள்?. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா, இல்லையெனில் மத்திய பாதுகாப்பு படைக்கு உத்தரவிட நேரிடும்’ என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பி இந்த வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்தார். மேலும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

Advertisment