young man posted obscene photos of female students

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 2 மாணவிகளின் புகைப்படத்தை மார்பிங் முறை மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த புகைப்படத்துடன் மாணவிகளின் செல்போன் எண்களை மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த பலரும் அந்த மாணவிகளை தொடர்புகொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சம்பந்தப்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக மாணவிகள் சந்தேகிக்கும் 4 மாணவர்களை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் இதனைச் செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் புகார் அளித்த மாணவியின் தோழியின் ஆண் நண்பர் இவர்களின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியது தெரியவந்தது.

பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக பழகி வந்துள்ள ஆண் நண்பரிடன் மாணவி திடீரென தொடர்பை துண்டித்து பேச மறுத்ததால் ஆத்திரத்தில் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தெற்கு சாலிந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகன் நக்கீரன் எனபவரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.