Skip to main content

ராஜ்பவன்கள் கவர்னர் மாளிகையா? அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

vck


விழுப்புரத்தில் நேற்று (15-09-2018) நடைபெற்ற தி.மு.கழக முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
 

என் உரையினை தொடங்குவதற்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு. மிக கவனமாக கேட்க வேண்டும்.  “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என முழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள் தனது 14வது வயதில் புலி, வில், கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடி ஏந்தி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கி தன் வாழ்வின் இறுதி வரை தமிழ் மொழியின் நலன்காக்க அரும்பாடுபட்டவர்.

 

மொழிப்போரில் தனிமைச்சிறை கண்டவர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழ் மொழியை மேன்மை கண்டிடச் செய்தவர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தேர்வு செய்து அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கமாக அதனை இசைக்கச் செய்து தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டியவர். தமிழ் ஆண்டுக்கணக்காக திருவள்ளுவர் ஆண்டு கணக்கை நடைமுறைப்படுத்தியவர். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து பண்பாட்டைக் காத்தவர்.

 

vilu

 

தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை இந்திய திருநாடு போற்றும் வகையில் பரிதிமாற் கலைஞரில் தொடங்கி பல கலைஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் வலியுறுத்திய செம்மொழி தகுதியினை தனது இடைவிடாத முயற்சியினால் 2004 ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் தமிழுக்கு செம்மொழி தகுதியினை பெற்றுத் தந்த பெருமை தலைவர் கலைஞர் அவர்களையே சாரும்.

 

தமிழ் மொழியின் பெருமையை இமயத்தில் நிலைநாட்டும் வகையில் இந்திய அரசின் செம்மொழித் தகுதியினை பெற்றுத் தந்ததுடன் உலகமெல்லாம் தமிழின் பெருமையை ஒலிக்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு கோவை மாநகரில் உலக செம்மொழி மாநாட்டினை மிகக் குறுகிய இடைவெளியில் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டியவர்.

 

அந்த மாநாட்டின் வாயிலாக இணையத்தில் தொடங்கி இன்றைய நவீன கைப்பேசி வரை அனைத்திலும் தமிழை எளிமையாக்க பயன்படுத்த வித்திட்டவர். தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர்.

 

இளமை முதல் முதுமை வரை உறுதியாக போராடி தமிழ் மொழிக்கு தன் படைப்புக்களாலும் தனது ஆட்சிக் காலத் திட்டங்களாலும் சிறப்பு சேர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளை இனி ஆண்டுதோறும் “தமிழ்ச் செம்மொழி நாள்” என்று கடைபிடிப்போம் என இந்த முப்பெரும் விழாவில் உங்கள் பேராதரவோடு நான் அறிவிக்கிறேன்.

 

அதையொட்டி நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் அவர் காலத்தில் அவரது சொந்த நிதியில் உருவாக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் மருத்துவ உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த “முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை” எனும் புதிய அறக்கட்டளை தொடங்கப்படவிருக்கிறது.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ஏழை நோயாளிகள் மருத்துவ சிகிச்சைப் பெற ஆண்டுதோறும் உதவி செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெறும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஐ.ஏ,எஸ். அகாடமி ஒன்று தொடங்கப்படும் இதன்வாயிலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் உள்நாட்டு, பன்னாட்டு பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இவற்றில் இளைய சமுதாயம் வெற்றிகரமாக பணியிடம் பெற முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

 

v3

 

பொது விருதுகள்: பல்வேறு துறைகளில் ஆண், பெண் இரு பாலின இளைஞர்களின் திறன்மிக சாதனைகளை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

 

பத்திரிக்கை, நாடகம் - திரைப்படம், புதினம், சிறுகதை, கவிதை, தொலைக்காட்சித் தொடர் என அனைத்து துறைகளிலுமே, தன் எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்கள், அத்தனையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளையே முழங்கியிருக்கிறார். இந்த முழக்கம் தொடர்ந்திடும் வகையில், ஆண்டுதோறும் திராவிட இயக்க மூத்த படைப்பாளிகளுக்கும், இளைய படைப்பாளிகளுக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் அறக்கட்டளையின் சார்பில் “திராவிட படைப்பாளி விருது” வழங்கப்படும்.

 

கழக விருதுகள்:  இயக்கமே தன் இதயம், இதயம் இயங்குவதே இயக்கத்திற்காக தான் என 94 வயது நிறைவடையும் வரை கழகம் வளர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தைக் கட்டிக் காக்கின்ற பணியில் மிகச் சிறப்பாக செயல்படுகின்ற ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி செயலாளர்களுக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

 

கழகத்தில் எந்தப் பதவியும் எதிர்பாராமல் சமூகப் பணிகளை மேற்கொண்டு அதன் வாயிலாக கழகத்திற்கு மக்களிடம் பெருமை சேர்க்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

பேரன்புக்குரிய, இந்த முப்பெரும் விழா விருது வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழா என்று சொல்வதா! மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய மாநாடு என்று அழைப்பதா! அல்லது மாநில மாநாடா என்று எண்ணக்கூடிய அளவிற்கு மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த விழாவினுடைய தலைவர் நம்முடைய பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை  அவர்களே, தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய விழுப்புரம் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் என்னுடைய ஆருயிர் சகோதரர் முனைவர் டாக்டர் பொன்முடி அவர்களே,  வாழ்த்துரை வழங்கி அமர்ந்திருக்கக்கூடிய கழக பொருளாளர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே, தலைமைக் கழகத்தினுடைய முதன்மை செயலாளர் என்னுடைய கழுதகை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி அவர்களே, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, வி.பி.துரைசாமி அவர்களே விருது பெற்றிருக்கக்கூடிய தந்தை பெரியார் விருது பெற்றுள்ள மும்பை தேவராஜன் அவர்களே, அறிஞர் அண்ணா விருது பெற்றுள்ள பொன் ராமகிருஷ்ணன் அவர்களே, கலைஞர் விருது பெற்றிருக்கக்கூடிய குத்தாலம் கல்யாணம் அவர்களே, பாவேந்தர் விருது பெற்றிருக்கக்கூடிய புலவர் இந்திரகுமாரி அவர்களே, பேராசிரியர் விருது பெற்றிருக்கக்கூடிய கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே, மாநிலங்களவை குழுத் தலைவர்  தங்கை கனிமொழி அவர்களே, வருகை தந்து இருக்கக்கூடிய தலைமைக் கழக நிர்வாகிகளே, மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களே, கழகத்தின் துணை அமைப்புக்களாம் தொழிலாளர் அணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, இளைஞர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி போன்ற பல்வேறு அமைப்புகளைக்  கட்டிக்காத்து வருகிற கழக காவலர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

 

“என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுடைய அன்பு உடன்பிறப்புகளே”, இந்தச் சொல் நம்மை இணைக்கின்ற மந்திரச்சொல், ஒரே குடும்பமாக கட்டிப்போடுகின்ற சொல், இந்தச் சொல் கொள்கை உணர்வை குருதியோட்டமெங்கும் கலக்கின்ற சொல், அந்தச் சொல்லை சொல்லுகிற போது நீங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைகிறீர்கள் உங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறீர்கள். உடன்பிறப்புகளே என்று நான் உங்களை அழைக்கும் போது எனக்கு ஏற்படக்கூடிய புத்துணர்வை என்னால் விவரிக்க முடியவே முடியாது, காரணம் நம் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக உருவாக்கி தந்திருக்கக்கூடிய இலட்சிய உணர்வை ஊட்டுகின்ற சொல் அந்தச் சொல். கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் இந்தச் சொல்லை கேட்டு அந்த சொல்லுக்கும் குரலுக்கும் உருகி நின்றது.

 

இந்த தமிழகம் இனி ஒரே ஒரு முறை அந்த காந்தக் குரலை கேட்கவே கேட்க முடியாதா என்கிற அந்த ஏக்கப் பெருமூச்சோடு நாமெல்லாம் இந்த திடலிலேயே திரண்டிருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் தான் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள், வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமல் உறங்கி கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்தநாள், அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பிறந்தநாள் இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களுக்கு ஏழைகளுடைய குரலுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒரு நாகரீகத்தை தமது இறுதி மூச்சு வரை கடைபிடித்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.

 

கலைஞர் அவர்களை யார் வேண்டுமானாலும் அணுகலாம், எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம், எதைப்பற்றி வேண்டுமானாலும் அவரிடத்தில் விவாதிக்கலாம், பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, கழக முன்னோடிகளாக இருந்தாலும் சரி, கழக நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, மாவட்ட அளவிலே, ஒன்றிய அளவிலே இருக்கக்கூடிய நிர்வாகிகள் மட்டுமல்ல கழகத்தினுடைய கடைசி தொண்டனாக இருக்கக்கூடிய எந்த தொண்டனாக இருந்தாலும் தலைவர் அவர்களை உரிமையோடு சந்திக்கலாம் கேள்விகள் கேட்கலாம் விவாதிக்கலாம். அதற்கு பொறுமையாக பதில் சொல்லக்கூடிய வழக்கத்தை, பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் .

 

அத்தகைய பாரம்பரிய அரசியல் பண்பாட்டு பின்னணியில் வார்த்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவன் தான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

அவருடைய வழியில் அவர் வகுத்து தந்திருக்கக்கூடிய அந்த கொள்கையின் வழியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றிருக்கககூடிய நானும் சொல்கிறேன். என்னிடத்தில் கழகத் தோழர்கள் மட்டுமல்ல, கடைக்கோடி தொண்டரும் என்னிடம் குறை நிறைகளை சொல்லக்கூடிய உரிமை உங்கள் அனைவருக்கும் உண்டு! உண்டு! உண்டு! என்பதை நான் மீண்டும் ஒருமுறை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 

 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் என்கிற அந்த முக்கனியே நமக்காக உருவாக்கி அந்த சுவையை நாமெல்லாம் பகிரக்கூடிய அந்த வாய்ப்பு ஏற்படுத்தி, நமக்கு வழங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், அதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் தான் இந்த முப்பெரும் விழா, இன்று விழுப்புரத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணன் துரைமுருகன் அவர்கள் இங்கு பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். பொன்முடி அவர்களிடத்திலே எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவர் எடுத்துச் சொன்னார் அவரே பாராட்டியிருக்கிறார் என்று சொன்னால் நான் அதிகமாக அவரை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை, இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் பொன்முடியை பாராட்டினால் அது என்னை பாராட்டுவதாக அமைந்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

 

தலைவர் கலைஞரிடத்திலே எந்த அளவிற்கு அன்பை மட்டுமல்ல, உரிமையை மட்டுமல்ல, அவர் நம்பிக்கையும் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த நம்பிக்கையோடுதான் இந்த ஆண்டு முப்பெரும் விழாவை நீங்கள் நடத்த வேண்டுமென்று தலைமைக் கழகத்தின் சார்பில் நாங்கள் அவர்களை கேட்ட நேரத்தில் மறுப்பேதும் சொல்லாமல் நாங்கள் எடுத்துச் சொன்ன அடுத்த வினாடியே சம்மதம் தந்து, இதை இன்றைக்கு வெற்றிகரமாக, இதோ முப்பெரும் விழா என்பது வெறும் விழாவோடு அமைந்துவிடக் கூடாது, ஏதோ நம்மைப் பற்றி நம்முடைய பெருமைகளை, சிறப்புக்களை மாத்திரம் மட்டும் இந்த நிகழ்ச்சியாக அமைந்து விடக்கூடாது இந்த விழா, இந்த விழாவினுடைய நாயகர்களாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை பெரியார்,  பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய லட்சியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையிலே இன்றைக்கு இந்த விழாவை, மிகுந்த எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்க கூடிய பொன்முடி அவர்களுக்கு பொருளாளர்  பாராட்டியிருந்தாலும் தலைவர் என்கிற முறையிலே தலைமைக் கழகத்தின் சார்பில் ஏன் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களை, பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு இந்த விழுப்புரத்திற்கு வருகின்ற நேரத்தில் எனக்கு எத்தனையோ நினைவுகள் வந்தன. 15 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 20.9.2003- ஆம் ஆண்டு நடைபெற்ற விழுப்புரம் மண்டல மாநாடு என்னுடைய நினைவுக்கு வந்தது. 1970-ஆம் ஆண்டு முதல் எத்தனையோ மாநாடுகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். 1980ம் ஆண்டுகளில் நான் எத்தனையோ மாநாடுகளில் உரையாற்றி இருக்கிறேன். ஆனால் 2003-ம் ஆண்டு நடைபெற்ற விழுப்புரம் மாநாட்டில், அன்றைக்கு பொன்முடி முன்னின்று நடத்திய மண்டல மாநாட்டில் தலைமையேற்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு மாநாட்டில் தலைமையேற்று உரையாற்ற வந்த நான், இன்றைக்கு இயக்கத்தினுடைய தலைவராக அதே பொன்முடி முன்னின்று நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதை எண்ணிப்பார்க்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன் – பெருமைப்படுகிறேன் - பூரிப்படைகிறேன் – புலங்காகித உணர்வோடு நான் உங்கள் முன்னால் இன்று நின்றுகொண்டிருக்கிறேன்.

   

காரணம் தலைவர் ஆனதற்கு பிறகு முதன்முதலாக கலந்து கொள்ளக்கூடிய விழா இந்த விழா.  அதுமட்டுமல்ல, விழுப்புரத்திலே இந்த முப்பெரும் விழா என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத விழாவாக அமைந்திருந்தாலும் என்னுடைய வாழ்நாளில் விழுப்புரத்தை என்னால் மறக்கவும் முடியாது, மறப்பதற்கான வாய்ப்பும் இருக்காது. விழுப்புண்ணை மறப்பவன் மனிதன் அல்ல எனவே, நான் விழுப்புரத்தை மறக்க மாட்டேன். அன்று நடந்த அந்த இரண்டு நாள் மாநாட்டில் தலைவராக அன்றைக்கு மாநாட்டிற்கு பொறுப்பேற்றிருந்த என்னை பலரும் பாராட்டி பேசியிருந்தார்கள். ஆனால், நிறைவாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பேசியதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. நிறைவுரை ஆற்றுகிற போது குறிப்பிட்டு சொன்னார்.

 

"தந்தைக்கு நேராக மகனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதமாட்டேன். தலைவனுக்கு நேராக ஒரு தொண்டனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதிக்கொண்டிருக்கிறேன் என சொல்லிவிட்டு சொல்லுகிறார். நான் தொண்டன் தம்பி ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்வேன்.

 

“நான் எனது 26 ஆவது வயதிலே தான் ஒரு மாநாட்டிற்குத் தலைமை ஏற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். 26வது வயதில் முதன் முதலில் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதை கலைஞர் சொல்லுகிறார்.  உனக்கு அந்த வாய்ப்பு 50வது வயதிலே தான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாகி கிடைப்பதற்குக் காரணம், எதுவும் அவசரமாக விரைவாக கிடைப்பதைவிட தாமதமாக கிடைத்தால் தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்கு வந்து சேர்ந்திருக்கிறது" என்று கலைஞர் குறிப்பிட்டார்.

 

தலைவர் கலைஞர் அவர்களே! உங்களின் தொண்டனான இந்த ஸ்டாலின் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வலிமையோடு இந்த விழுப்புரத்துக்கு வந்திருக்கிறேன்.

அதே விழுப்புரம் மாநாட்டில் தான் தலைவர் கலைஞர் எனக்கு ஒரு அறிவுரையும் சொன்னார். என்ன அறிவுரை தெரியுமா?

"எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக கருதிக் கொண்டு நீ நடைபோட்டு விடக் கூடாது. எங்கேயிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வெளியே தெரியாமலே கூட இருக்கலாம். அந்த அங்கீகாரத்தையும் பெறுகின்ற அளவுக்கு அந்த அணுகுமுறையை நீ கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்த மாநாட்டில் கிடைத்த தலைமைப் பதவி நிலைக்கும் என்பதை மாத்திரம் உனக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்." ஒரு கட்டளை போட்டார் அந்த கட்டளையை இன்றைக்கும் என்னுடைய இதயத்தில் ஒரு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவுத்துக்கொள்கிறேன்.

 

தலைவர் கலைஞர் அவர்களே திராவிட இயக்கத்தினுடைய முதுபெரும் தூண் நம்முடைய பேராசிரியர்.  95 வயது அடைந்திருக்கும் நம்முடைய பேராசிரிய பெருந்தகை தொடங்கி நம் இயக்கத்தில் இன்றைக்கு இணைந்திருக்கிற இளைஞன் வரைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவனாக, உங்களின் ஸ்டாலின் உருவாகி இருக்கிறான் என்பதைச் சொல்வதற்காகத் தான் நான் விழுப்புரம் வந்திருக்கிறேன் தலைவர் அவர்களே!

 

அந்த மாநாட்டில் தான், கலைஞர் அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லி வருத்தப்பட்டார். ஆனால், அந்த வருத்தத்திற்கு விளக்கமும் தந்தார், அது என்ன தெரியுமா? தலைவர் கலைஞர் தலைவரான போது பேராசிரியர் அவர்கள் கூட முதலில் நம்பிக்கை பெறவில்லை, பின்னர் எனது செயலைப் பார்த்து தலைவராக அவர் ஏற்றுக் கொண்டார்.  கலைஞர் இந்த செய்தியைக் குறிப்பிட்டார். கலைஞர் அவர்களை விட நான் கொடுத்து வைத்தவன்.

 

என்னைப் பேராசிரியர் அவரகள் தான் முதன்முதலில் முன்மொழிந்திருக்கிறார். ஸ்டாலின் தான் தலைவர் என்பதை பொதுக்குழுவில் பேராசிரியர் அவர்கள் தான் அறிவித்தார். எனவே நான் கொடுத்து வைத்தவன் தானே.

 

நான் கலைஞர் அல்ல! இதனை பொதுக்குழுவிலேயே சொன்னேன். பொதுக்குழுவிலே குறிப்பிட்டுச் சொன்னேன். நான் கலைஞர் அல்ல, ஆனால் கலைஞரைப் போல் உழைக்கத் தெரியும். கலைஞர் தந்த துணிச்சல் இருக்கிறது. இந்த துணிச்சலும், உழைப்பும் அவர் தந்த பயிற்சியால் எனக்கு வந்திருக்கிறது.

 

கலைஞருக்கு பின் நீதான் தலைமைக்கு தகுதியானவன் என்று ஒரு மனதாய் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் உதிரத்தின் உறவாய் உங்கள் கரம் பற்றி நான் எழுந்து நிற்கிறேன். நான் முன்பு சொன்னது போல புதிதாய் பிறந்து நிற்கிறேன். முப்பெரும் விழாவை கொண்டாடுகிற இந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்காக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்க்கூடிய சுயமரியாதை – சமூகநீதி – சமதர்மம் – பகுத்தறிவு இவை நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு பிடித்திருக்க்கூடிய இந்த சோதனையில் இருந்து இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற எடுபிடியாய், அடிமைகளாய் செயல்பட்டுக் கொண்டிருக்கூடிய இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் உறுதியெடுக்க வேண்டும். நாம் ஓய்வெடுக்க முடியாது, நாம் ஓய்வெடுத்துவிட்டால் இருண்டு கிடக்கின்ற தமிழகம் விடியவே விடியாது. அந்த இலக்கை அடைவதற்காக, ஊக்கத்தையும், உற்சாகத்தையும் புதுப்பித்துக்கொண்டே இருந்தால் தான், மதசார்பற்ற ஆட்சியினை உருவாக்கிட முடியும். மதவாத நச்சுக்காற்றை முறியடித்து பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பாசிச நாடுகளில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது. பேச்சுரிமை கிடையாது, எழுத்துரிமை கிடையாது என்ற நிலை உண்டு.

முழு அளவில் பாசிசத்தைப் பின்பற்றியிருக்கக்கூடிய நாடுகளுடைய பட்டியல் எடுத்துப் பார்த்தால் ஜெர்மனியினுடைய நாஜி அரசு, இத்தாலியினுடைய முசோலினி அரசு ஆகியவற்றை நாம் இன்றைக்கு அடையாளம் காட்டுகிறோம், அதற்கு ஈடாக இணையாக நம்முடைய நாட்டில் மத்தியில் மோடி அரசுக்கும், மாநில பேடி அரசுக்கும் உண்டு என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேதனைப்படுகிறேன். இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமான பாசிச ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தானே, ‘பாசிச ஆட்சி ஒழிக’ என்று குரல் கொடுத்த ஒரு மாணவியினுடைய பாஸ்போர்ட்டை இன்றைக்கு முடக்கியிருக்கிறார்கள்.

 

இந்துக்கள் மீது தூசியோ துரும்போ விழுந்தாலும் காவி புரட்சி வெடிக்கும் என்று கபட வார்த்தைகளைப் பேசி இந்த தமிழகத்தையும், தமிழினத்தையும் துண்டாட நினைத்துக் கொண்டிருக்கிறார்களே, துடித்துக் கொண்டிருக்கிறார்களே நான் அவர்களைப் பார்த்து கேட்கிறேன்.

 

பல கோடி ரூபாயை உங்களுக்குத் தேர்தல் நிதியாக தாரை வார்த்த வேதாந்தா நிறுவனத்திற்காக - அவர்களின் கைக்கூலிகளாக மாறி, தூத்துக்குடியில் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்களே உங்களால் கொல்லப்பட்ட 13 பேரில் 9 பேர் இந்துக்கள் தானே?

 

இந்த வருடம் ‘நீட்’டால் இறந்த பிரதீபா ஓர் இந்துச் சகோதரி தானே? கேரளாவிற்குத் தேர்வெழுத அலைக்கழிக்கப்பட்டு இறந்த ஒரு மாணவனுடைய தந்தை கிருஷ்ணசாமி ஸ்ரீனிவாசனும் ஓர் இந்துச் சகோதரர் தானே?

 

நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடி, வாழ வழியின்றி தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் இந்துக்கள் தானே? கடன் தள்ளுபடிக்காக டெல்லியிலே போராடி நிர்வாணமாக ஓடிய விவசாயிக்ள் இந்துக்கள்தானே?

 

‘இம்’மென்றால் சிறைவாசம்; ‘ஏன்’ என்றால் துப்பாக்கிச்சூடு என்பதே உங்கள் அரசியல் நாகரிகம். அனைத்துக் கொடுமைகளையும் அரங்கேற்றி விட்டு, யாரிடம் கபட நாடகம் ஆட இன்றைக்கு முற்படுகிறீர்கள்? நான் உறுதியோடு சொல்லுகிறேன், தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் உங்களிடம் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான, சூழ்நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.

 

மாநிலங்களை அடக்கி ஆளக்கூடிய பா.ஜ.க அரசால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கூடிய மாநிலங்களில் முதல் இடம் எதற்கு என்று சொன்னால், நம்முடைய தமிழ்நாட்டிற்குத் தான். காரணம் இந்த மாநிலத்தில் ஆட்சியாளர்கள் அடிமைகளாகத்தான் கோட்டையில் இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதுதான் அவர்களுடைய இலட்சியம், மானம், மரியாதை, உரிமைகள் அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆட்சியிலே இருப்பதுதான் அவர்களது இலட்சியம், ஊழல் செய்வதுதான் அன்றாட பணி. நாளொரு ஊழல் பொழுதொரு ஊழல் என்று சொல்லுவார்களே அதுதான் இன்றைக்கு அவர்களுடைய முழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

 

குட்கா ஊழல், குவாரி ஊழல், முட்டை ஊழல், நெடுஞ்சாலை ஊழல், உள்ளாட்சி ஊழல், பேருந்து ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், வாக்கி டாக்கி ஊழல், டெண்டரிலே ஊழல், பினாமி ஊழல், நின்றால் ஊழல், நடந்தால் ஊழல், படுத்தால் ஊழல், உட்கார்ந்தால் ஊழல், ஊழலோ ஊழலாக ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடக்கிறது. அமைச்சரினுடைய வீட்டிலேயே ரெய்டு நடக்கிறது. பொறுப்பிலே இருக்கக்கூடிய தலைமைச் செயலாளர், வீடுகளிலே அலுவலகத்திலே ரெய்டு நடக்கிறது. இதைவிட வெட்கக்கேடு - மானக்கேடு காவல்துறையினுடைய தலைவராக இருக்கக்கூடிய டி.ஜி.பி. இல்லத்திலே ரெய்டு நடக்கக்கூடிய நிலை இதுவரை தமிழ்நாட்டிலே வந்திருக்கிறதா? நான் கேட்கிறேன்.

யார் யாருக்கு ஊழல்? யார் யாருக்கு இலஞ்சம்? யார் யாருக்கு கமிஷன்? எவ்வளவு பர்சன்டேஜ்? டைரி சிக்கியுள்ளது. காருக்குள் பதுக்கி வைக்கப்பட்ட பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள் மட்டும் இன்னும் சிக்கவில்லை சிக்கப் போகிறார்கள். எப்பொழுது?

விரைவிலே, தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி உருவாகிற நேரத்திலே கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் கம்பி எண்ணக்கூடிய சூழ்நிலை வரப்போகிறதா இல்லையா என்று பாருங்கள்.

 

தொடர்ந்து பி.ஜே.பி அரசுக்கு காவடி தூக்கிக்கொண்டு வருகிற அ.தி.மு.க அரசுதான் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய அவமானச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கொள்கையில்லாத ஒரு ஆட்சி கொள்கையென்றால் என்ன என்றே தெரியாத, புரியாத ஒரு ஆட்சி நாட்டிற்கே ஒரு மிகப்பெரிய ஆபத்து.

மறந்துகூட ஒரு இடத்திலே கொள்கை என்றால் என்ன என்று கேட்டீர்கள் என்றால்.?

யாரும் கேட்டு விடாதீர்கள். கேட்டால் சொல்லுவார்கள் தெர்மாகோலா? என்று கேட்கக்கூடிய அறிவியல் மேதாவிகள் இருக்கிறார்கள் அங்கே.

அவர்கள் பொய் பித்தலாட்டத்தை தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற சத்திய சீலர்கள். ஒரு நிமிடம் கூட இந்த தமிழகத்தை ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஜோக்கர்கள் அவர்கள். அரசு நிர்வாகத்தை நாசமாக்கி தமிழ்நாட்டை இன்று சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் தான் நாம் ஜல்லிக்கட்டுக்கு நாம் மல்லுக்கட்டினோம்! இவர்களால் தான் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நம் உறவுகளை பறிகொடுத்தோம், பறிதவித்தோம்!

 

தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள பி.ஜே.பி அரசுக்கு அடிமைகளாய் இந்த ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை வேரோடு பிடிங்கி விரட்டி அடிக்க வேண்டும்.  அது நம்மால் முடியும்! கலைஞரின் உடன்பிறப்புகளால் உங்களால் முடியும்!

நான் கேட்கிறேன்! அண்மையிலே பாரதத்தினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள், ஒரு கூட்டத்தில் பேசுகிற பொழுது அவர் ஆற்றிய உரை, “எங்களுடைய 48 மாத நிர்வாகம் குறித்து விவாதிக்க தயார்” என்று கூறியிருக்கிறார்.

 பிரதமர் மோடி அவர்களே, விழுப்புரத்தில் நடைபெறக்கூடிய இந்த முப்பெரும் விழா மேடையில் இருந்து நான் கேட்கிறேன். உங்களால் பதில் தர முடியுமா? 

·  வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியிலே போடுவோம் என்று உறுதி தந்தீர்களே. நிறைவேற்றி விட்டீர்களா? நான் கேட்கிறேன்.

·      பத்துக்கோடிப் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம் என்று சொன்னீர்களே! எங்காவது வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டிருக்கிறதா?

·         கருப்புப் பணத்தை ஒழிக்கத் தான் இந்த பண மதிப்பிழப்பு என்று சொன்னீர்களே! கருப்பு பணம் ஒழிந்து விட்டதா? 

·         வறுமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டது பண மதிப்பிழப்பு என்று சொன்னீர்களே!  வறுமை ஒழிந்து விட்டதா?

·         உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து பேட்டி தருகிறார்களே யாருடைய ஆட்சியிலாவது இது நடந்து இருக்கிறதா?

·         நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தோமே என்னாயிற்று? இதற்கு பதில் சொல்ல முடியுமா?

·         ராஜ்பவன்கள் கவர்னர் மாளிகையா? அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா?

·         இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்த உருப்படியான திட்டம் என்ன என்று சொல்லுங்கள்? ஒன்றாவது சொல்லுங்கள் பார்ப்போம்?

 

இதைத்தான் இந்த விழுப்புரத்தில் இருந்து விந்திய மலையை நோக்கி ஸ்டாலின் கேட்கக்கூடிய கேள்விகள் பதில் சொல்லுங்கள். மாநிலத்தை ஆளுகின்ற இந்தக் கொள்ளைக் கூட்டத்தையும் அவரைக் காப்பாற்ற கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மத்தியில் ஆளக்கூடிய மதவாத, சர்வாதிகார இரட்டை வேட பா.ஜ.க. அரசையும் ஜனநாயக களத்தில் வீழ்த்துவது ஒன்றுதான் நம்முடைய தற்போதைய இலக்கு.

இது முப்பெரும் விழா மேடை மட்டுமல்ல, தேர்தல் களத்திற்கு நாம் தயாராகி விட்டோம் என்று பறைசாற்றுகின்ற பாசறை இது! மறந்து விடக்கூடாது. எந்தத் தேர்தல் என்று உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய நீங்கள் கேட்கக் கூடும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலா? உள்ளாட்சித் தேர்தலா? சட்டமன்றத் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? எந்த தேர்தலாக இருந்தாலும் நாட்டின் நிலைமையைக் கருதி களம் எதுவாக இருந்தாலும் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் அதில் எந்தளவும் சந்தேகமும் இல்லை.

இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி அரசு வீடு புகுந்து திருடவில்லையே தவிர எல்லா அமைச்சர்களும் இன்றைக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடு புகுந்து திருடவில்லை அவர்கள், அது மட்டும் தான். 

ஈரோடு மண்டல மாநாட்டிலே நான் குறிப்பிட்டேன். வெற்றிக் கனியைப் பறிப்போம் தலைவர் கலைஞர் இடத்திலே கொண்டு போய் சமர்ப்பிப்போம் ஆனால், அதற்குள் அவர் மறைந்து விட்டார். பொதுக்குழுவிலே குறிப்பிட்டுச் சொன்னேன்! அவர் மறையவில்லை! அவர் உங்களுடைய உருவத்திலும் இருக்கிறார்! ஒவ்வொருடைய உள்ளத்திலும் இருக்கிறார். கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியடை கலைஞர் மகன் சாதித்தான்! தலைமை தொண்டன் சாதித்தான் என்ற பெயர் வாங்கக் கூடிய மகனாக, பிள்ளையாக நான் மாற வேண்டும் அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

 

எனவே, தலைவனாக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக பாருங்கள், உங்களின் உடன்பிறப்புகளின் ஒருவனாக என்னை பாருங்கள்! 70 ஆண்டு காலம் பட்டொளி வீசிப் பறக்கக்கூடிய நம்முடைய இருவண்ணக் கொடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு செலுத்தி தமிழகத்தை வளம் பெற்ற நாடாக நாம் உருவாக்கிட வேண்டும்.

இந்த முப்பெரும் விழாவில் சூளுரைப்போம்!

பாசிச ஆட்சி முடியட்டும்!

மக்களாட்சி விடியட்டும்!

ஊழல் ஆட்சி முடியட்டும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலரட்டும்!

விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !