Skip to main content

“நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன” - காஷ்மீர் முதல்வர் அதிர்ச்சி!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

Kashmir Chief Minister says Incessant sounds of explosions from where I am

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்றிரவு பாகிஸ்தான், 300 இருந்து 400 ட்ரோன்கள் அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதில் சில ட்ரோன்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை எனவும், அதனை இந்திய ராணுவம் அழித்து முறியடித்ததாகவும், லெப்டினன்ட் கர்னம்ல் சோஃபியா குரேஷி இன்று (09-05-25) தகவல் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, , பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ முன்னாள் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரும் தாக்குதலால், போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

இன்றும், எல்லை மீறி பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தான் இருக்கும் இடத்தில் இருந்து குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள். அநேகமாக அது கனரக பீரங்கிச் சத்தங்கள், இப்போது கேட்கின்றன. ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களுக்கு தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும், ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம், இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்