Manipulative plan People struggle will continue Su Venkatesan MP

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம். மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும். மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி உள்ளடங்கிய பல கிரமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசின் கனிமவளத் துறை கடந்த 7.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியது.

Advertisment

உயிர்பன்மைய முக்கியத்துவம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்புக்குள்ளாகும் என்னும் வகையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் கனிமவள அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உயிர்பன்மையம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஆராய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை மாநில அரசு இந்தத் திட்டத்திற்கான அடுத்தகட்ட அனுமதி சார்ந்த நடவடிக்கைகளை இடைக்காலமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு மூலம் இந்தப் பகுதியை தவிர்த்து மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புராதானச் சின்னங்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும். எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சூழலை பாதுகாக்கும்.

Advertisment

Manipulative plan People struggle will continue Su Venkatesan MP

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி, பாதுகாக்கப்பட்ட பகுதியில் வரக்கூடிய சுரங்கத்தை மட்டும் கைவிடுவது நோக்கமல்ல. ஒட்டுமொத்த திட்டத்தையும் கைவிட வேண்டும். மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.