
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மாரப்பம்பாளையம் வெள்ளியங்காடு பகுதியில் கருப்பண்ணன்(75).லட்சுமி(65) தம்பதியினர் மகன் குணசேகரன் மற்றும் மருமகள் சவிதா ஆகியோருடன் வாய்க்கால் கரையோரம் வசித்து வருகின்றனர்.நேற்றிரவு குணசேகரன்-சவிதா தம்பதியினர் வெளியே சென்றிருந்த நிலையில் வயதான தம்பதியினர் கருப்பணன், லட்சுமி தம்பதியினர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது நாய் குறைத்துக்கொண்டே இருந்ததால் கருப்பண்ணன் வெளியே வந்து பார்த்தபோது சிலர் டார்ச் அடித்து வீட்டை நோட்டமிட்டதாகவும் சத்தம் போட்டவுடன் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதும் வளர்ப்பு நாய் வாந்தி எடுத்ததாகவும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கருப்பணன் வசித்து வரும் தோட்டத்து வீட்டிற்கு அருகே கண்ணுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பீர்க்கங்காய்க்கு டார்ச் வெளிச்சத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அவ்வழியே இருசக்கர வாகனம் சென்றதாக கண்ணுசாமி தெரிவித்துள்ளார். இதனை பார்த்து வயதான தம்பதியினர் கருப்பண்ணன், லட்சுமி அச்சத்தின் காரணமாக வீட்டை நோட்டமிட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவ்வழியே இருசக்கர வாகனம் சென்றது தெரியவந்தது.
மேலும் அருகில் பாலு என்பவரின் வளர்ப்பு நாய் வாந்தி எடுத்தது குறித்து கால்நடை மருத்துவர், அதிகளவு உணவு உட்கொண்டால் நாய் வாந்தி எடுத்ததாக தெரிவித்துள்ளார். எனவே வயதான தம்பதியினர் தெரிவித்தது போல் அடையாளம் தெரியாத நபர்கள் டார்ச் அடித்து வீட்டை நோட்டமிட்டதாக எந்தவித சம்பவமும் நடக்கவில்லை என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகிரி அருகே 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்கள் கண்டறியப்பட்டு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது தவிர 6 இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை சிவகிரி பகுதியில் 54 சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் கைரேகை எடுக்கப்பட்டு கைரேகை பிரிவினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.