மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை விஜயபாஸ்கர் கண்டுகொள்ளவில்லை: பன்னீர்செல்வம் புகார்

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாணவர்களின் தொடர் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை என திமுகவின் முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவகல்லூரியை அரசு ஏற்றக வேண்டும், அரசு மருத்துவகல்லூரிகளில் வாங்கப்படும் கல்வி கட்டணத்த்தை வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சென்னையில் உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் வியாழக்கிழமை 37வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 37 வது நாள் போராட்டத்தில் திமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவர் போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்தார். அப்போது மாணவர்களிடம், அவர்களது குறைகளை கேட்டறிந்த அவர், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என உறுதிஅளித்தார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் இருந்திருந்தால் மாணவர்களுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது எனவும், மருத்துவர்களுக்கான ஊதியத்தை திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதிதான் உயர்த்தி தந்ததாகவும் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறுகையில் மருத்துவ மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில், இந்தபல்கலைக்கழகத்தின் காட்சிகள் மாறவில்லை,மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை, இந்த மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் விஜயபாஸ்கர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும் இந்த பிரச்சினை குறித்து கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதாக கூறும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவால் எடுக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், மருத்துவமாணவர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாகவும், இது அரசு கல்லூரியா அல்லது தனியார் கல்லூரியா என தெரியாமல் ரெண்டுங்கெட்டான் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் அளிப்பதாக, அனைத்து கட்சியினரையும் ஒன்றிணைத்து மாணவர்களுக்காக போராட உள்ளதாக கூறினார்.