Skip to main content

"ஆதங்கப்படுவதில் பலன் இல்லை" - தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரிய மனுவில் நீதிபதி கருத்து 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
judge's opinion on a plea seeking to make Tamil the language of litigation

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவத் சிங். இவர் சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வருகிற 20 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன். 

எனவே, இதற்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். ஆனால், என்னுடைய கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்டது. எனவே, எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநகர் காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயசந்திரன் முன்பு நேற்று (18-12-23) விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, “தமிழ் வழக்காடு மொழியாக வேண்டுமென்ற மனுதாரரின் எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதற்கு இதுபோன்ற உண்ணாவிரதம் இருப்பது சரியான செயல் அல்ல. சட்ட மொழிகளுக்கு ஏற்ப தமிழ் மொழியில் சரியான சொற்களை கண்டறிய வேண்டும். அதேபோல், ஆங்கிலத்தில் உள்ள சட்டப் புத்தகங்களை எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்க்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் எந்த பலனும் இல்லை. நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க நிதி ஒதுக்குவது மட்டும் போதாது. அடிமட்ட அளவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மனுதாரரின் போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக காவல்துறையின் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், ‘சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் போன்ற போராட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தன் கோரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேறு எந்த மாதிரியான போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும்? என்று போலீஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்