ரயில்வே பாலத்தின் கீழ் நீர் சூழ்ந்துள்ளதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே பாலத்தின் கீழ் நீர் சூழ்ந்துள்ளதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-சென்னை இடையே இரட்டை இரயில் பாதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அப்போது விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையையொட்டி கவணை, சித்தேரிக்குப்பம், செம்பளக்குறிச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலையில் இருந்த ஆளில்லா ரெயில்வே கேட் அகற்றப்பட்டு ரெயில்வே கீழ்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. அதேசமயம் இந்த பாலத்தில் தண்ணீர் வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால் வசதி செய்யப்படாததால் ஒவ்வொரு மழையின் போது பாலம் முழுவதும் நீச்சல்குளம் போல நீர் நிரம்பிவிடுகிறது.
ஒரு நாள் மழை பொழிந்தால் சுமார் இரண்டு மாதம் வரை தண்ணீர் வடிவதில்லை. இதனால் இந்த பகுதி கிராம மக்கள் விருத்தாசலம் வருவதற்கும், ஊர்களுக்கு செல்வதற்கும் முடியவில்லை. கிராமங்களுக்கு சென்ற பேருந்துகள் கூட பாலம் முழுவதும், தண்ணீர் உள்ளதால் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொது மக்களும் அவசர வேலையாகவோ, அன்றாட் அவேலையாகவோ ஊரை விட்டு வெளியில் வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் இந்த பாலத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அருகிலுள்ள 50 ஏக்கர் விளை நிலங்களும் எந்த சாகுபடியும் செய்ய முடியவில்லை. இந்த நிலையை போக்க கோரி இப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதையடுத்து கூடிய விரைவில அப்பகுதி மக்கள் திரண்டு மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- சுந்தரபாண்டியன்