Skip to main content

பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்கு; உடனே திரும்ப பெற வேண்டும்: திருமா வலியுறுத்தல்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்கு; உடனே திரும்ப
பெற வேண்டும்: திருமா வலியுறுத்தல்

நெல்லை மாவட்டம் பணகுடிக்கு அருகில் உள்ள மகேந்திரகிரி மலையில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகப் பொதுமக்கள் கூறியதை அடுத்து புதியதலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் ராஜு கிருஷ்ணா, நாகராஜன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் அதை ஊடகங்களின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் போவதாக காவல்துறை அச்சுறுத்திவருகிறது.

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடுத்து கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் இந்தச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அத்துடன், பத்திரிகையாளர்கள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பபெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மகேந்திரகிரி மலையில் வெடிப்பு சத்தம் கேட்ட தகவல் உண்மையா இல்லையா என்பதை உறுதி செய்து அதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அதை விட்டுவிட்டு செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து மிரட்டுவது இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத ஒரு நடைமுறையாகும். இதை கண்டித்து அமைதி வழியில் போராடிய ஊடகவியலாளர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு மிரட்டபட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிடவேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பொய் வழக்குகளைத் திரும்ப பெற வலியுறுத்திய போது, டெல்லியிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு போட்டதாக காவல்துறையினர் சார்பில் கூறப்பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற ஐயத்தை மீண்டும் இது ஏற்படுத்தியுள்ளது. இதையும் தமிழக ஆட்சியாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்