
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடியின் 4வது மாடியிலிருந்து குதித்து அரசு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் ஆனந்தன் (33). இவர் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ஆனந்தன் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் பணி முடித்து வீடு திரும்பிய அவர் யாரிடமும் பேசாமல் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த ஆனந்தனை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து வந்த பள்ளிக்கரணை போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனந்தனின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ஆனந்தன் தற்கொலை குறித்து அவருடன் பணியாற்றும் மருத்துவர்களிடம் கேட்டபோது, “சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த ஆனந்த், 3 ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். மன அழுத்தத்துக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று வந்தார் என்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஆனந்தன், வேலை பார்த்த இடத்தில் அவருக்குப் பதவி உயர்வில் சிக்கல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், குடும்பத்திலும் சில பிரச்னைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக ஆனந்தன் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த விரக்தியில்தான் தற்கொலை முடிவை அவர் எடுத்ததாக எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.