Skip to main content

அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை முயற்சி...

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Cuddalore district mangalur municipal admk leader


கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கண்டமத்தான் ஊராட்சி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், வயது 37. இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 


இந்த நிலையில் அதே ஊராட்சி செயலாளர் முத்தழகனுக்கும், வெங்கடேசன் என்பவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது. இதில், கவுன்சிலர் சரவணன் வெங்கடேசனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, ஊராட்சி செயலாளர் முத்தழகன், அவரது தயார் அன்பழகி, அவரது உறவினர் மங்களேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, கடந்த 2ஆம் தேதி சரவணனை ஆபாசமாகப் பேசி, திட்டியாத தனது உறவினர்களிடம் கூறி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 


இதையடுத்து சரவணன், அன்று இரவு 11 மணி அளவில் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவர் களைக்கொல்லி மருந்து குடித்த விஷயம் அறிந்த அவரது உறவினர்கள் சரவணனை உடனடியாக மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்