Skip to main content

பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறை: திருநாவுக்கரசு கண்டனம்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறை: திருநாவுக்கரசு கண்டனம்

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பல்வேறு அடக்குமுறைகள் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் ஏவி விடப்பட்டு வருகின்றன. இதற்கு பத்திரிகையாளர்களும் விதிவிலக்கல்ல என்கிற வகையில் நெல்லை மாவட்டத்தில் அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட ராதாபுரம் அருகில் உள்ள இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது குறித்து புதிய தலைமுறை செய்தியாளர் வள்ளியூர் ராதாகிருஷ்ணன், நாகராஜன் கந்தன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி வெளியிட்டதற்காக பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக கருதப்படுகிற பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் அ.தி.மு.க. ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய வழக்குகள் பதிவு செய்வதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால் அதனால் ஏற்படுகிற எதிர் விளைவுகளை சந்திக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு நியாயம் கேட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற போது பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. நெல்லை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு அராஜக போக்குடன் செயல்படுகிற காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன். பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் பாதுகாவலனாக இருக்கிற பத்திரிகையாளர்கள் மீது இனியும் இத்தகைய தாக்குதல் தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்