நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
பாட்டி வைத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பின்னர் வில்லிவாக்கம் பெருமாள் கோவில் அருகில் கட்சியின் சார்பில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஜி.கே.வாசன் திறந்துவைத்தார். இதன் மூலம் அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயத்தை மட்டுமே நம்பாமல் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய அரசும் கவனம் செலுத்த வேண்டும். நம் பாரம்பரிய வைத்திய முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நூற்றுக் கணக்கான பாட்டி வைத்தியங்கள் நம்மிடையே உண்டு. அவற்றை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். எனவே நிலவேம்பு கசாயத்தை எந்த அளவு குடிக்க வேண்டும் என்பதை அரசு முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.