Skip to main content

பூஞ்சை நோய்க்கு எதிராக செயல்படக் கூடிய வெற்றிலை..?

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

Betel leaf that can act against fungal diseases ..?


புதுக்கோட்டை மாவட்ட கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மூலிகை தாம்பூலம் நோயாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். உம்மல் கதிஜா கூறியதாவது, “மூலிகை தாம்பூலம் என்பது வெற்றிலை, கிராம்பு, ஓமம், தாளிசாதி, வடகம், பனங்கற்கண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெற்றிலை 2, கிராம்பு 2, தாளிசாதி வடகம் 1 இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு  சேர்த்து செய்யப்படுகிறது.

 

வெற்றிலையில் ஹைட்ராக்ஸி சாவிகோல் என்ற பயோட்டோ கெமிக்கல் உள்ளது. இது ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படக்கூடியது. மேலும், பசியைத் தூண்டக் கூடியதாகவும் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதை சீராக்குவதற்கும் பயன்படுகிறது. இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தக் கூடியதாகவும் உடலில் உள்ள வலியைப் போக்கி நன்றாகப் பசியைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும். ரத்த தட்டு அணுக்கள் குறைவதைத் தடுக்கக் கூடியதாகவும், ரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியதாகவும், பூஞ்சை நோய்க்கு எதிராக செயல்படக் கூடியதாகவும் இருக்கும்.

 

கிராம்பு, மிகுந்த காரத்தன்மையும் அமிலத்தன்மையும் உடையது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்.

 

இவற்றுடன் சித்த மருந்தான தாளிசாதி வடகம் வைத்து தாம்பூலமாக பயன்படுத்தும்போது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளான நோயாளர்களுக்கு அஜீரணம் போன்ற ஜீரண மண்டல உபாதைகளும் நுரையீரல் பாதிப்பு உண்டாகாமலும் உடல்வலி போன்ற உபாதைகள் இல்லாமலும் காக்கிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு நோயாளர்களுக்கு இந்தத் தாம்பூலத்தை வழங்கிவருகிறோம். இதனால் அவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக ஏற்படாமல் தடுத்து ஆக்சிஜன் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், உடல் வலியைப் போக்கி நோய்த் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உதவுகிறது என்று கூறினார்.

 

இதனை மருத்துவர்கள் தாமரைச்செல்வன், வேங்கடகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் அடங்கிய குழுவினர் தினசரி வழங்கிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்