
வேலூர் மாநகரட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. வேலூர் மேயர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆதரவாளரா? மாவட்டசெயலாளர் நந்தகுமார் ஆதரவாளரா என்கிற கேள்வி எழுந்தது. இறுதியில் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ ஆதரவாளரான மாவட்ட மகளிரணி செயலாளர் சுஜாதா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். துணைமேயராக சுனில் தேர்வு செய்யப்பட்டு இருவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வேலூர் மாநகராட்சியில் தாராபடவேடு, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் என நான்கு மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களின் மண்டல தலைவர்கள் யார் என்பதில் போட்டி உருவானது. முதல் மண்டலத்துக்கு புஷ்பலதாவன்னியராஜா, இரண்டாம் மண்டலத்துக்கு வீனஸ்.நரேந்திரன், மூன்றாம் மண்டலத்துக்கு யூசூப்கான், நான்காம் மண்டலத்துக்கு வெங்கடேசன் என திமுக தலைமை அறிவித்தது. இதற்கான தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்றது.
முதல் மண்டல தலைவராக புஷ்பலதாவும், நான்காம் மண்டல தலைவராக வெங்கடேசனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு மற்றும் மூன்றாம் மண்டலத்துக்கு போட்டி உருவானது. மூன்றாம் மண்டல தலைவருக்கு திமுக சார்பில் யூசூப்கான் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் எழிலரசன் வேட்புமனுதாக்கல் செய்தார். மறைமுக தேர்தல் முடிவில் 15 வாக்குகளில் 11 கவுன்சிலர்களின் வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் யூசூப்கான் வெற்றி பெற்றார்.
இரண்டாம் மண்டல தலைவர் பதவிக்கு திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் வீனஸ்.நரேந்திரனை எதிர்த்து திமுக வேலூர் திமுக மாவட்ட துணைச்செயலாளர் கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை வேட்புமனுதாக்கல் செய்தார். இது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாநகர திமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்தது. கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை தனக்கு 11 கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாக கூறினர். அதிமுக கவுன்சிலர்கள் இருவர், பாஜக கவுன்சிலர் ஒருவர், பாமக கவுன்சிலர், திமுக கவுன்சிலர்கள் 5 பேர் என கணக்கு காட்டினார். மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கிலேயே கட்சிக்கு விரோதமாக செயல்படாதீங்க என ஆர்.பி.ஏழுமலை தரப்பிடம் சமாதானம் பேசியுள்ளார்கள் திமுக நிர்வாகிகள். அவர் சமாதானமாகாததால் ஆர்.பி.ஏழுமலையின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யுங்கள் என திமுக முக்கிய நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது.
நாங்க ஆளும்கட்சி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் நாங்க பார்த்துக்கறோம் என வாக்குறுதி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மணி நேரம் கழித்து ஏழுமலை வேட்புமனுவில் வார்டு எண் மாற்றி குறிப்பிட்டுள்ளார் என காரணம் கூறி அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் ஆணையாளர். மூன்றாவது மண்டல தலைவராக திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் வீனஸ்.நரேந்திரன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து மாநகர கூட்ட அரங்கிலேயே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் ஏழுமலை தரப்பினர். பின்னர் போலிஸ் வரவைக்கப்பட்டு அவர்களை கூட்ட அரங்கில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதுக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏழுமலை, “வேட்புமனுதாக்கல் செய்தபின் மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார் கமிஷனர். மூன்றாவது மண்டலத்துக்கு தேர்தல் நடத்திவிட்டு பின்பு இரண்டாவது வார்டுக்கு நடத்துகிறேன் என அறிவித்தார். 3 மணி நேரத்துக்கு பிறகு வார்டு எண் சரியாக குறிப்பிடவில்லை எனச்சொல்லி என் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இது மோசடியானது. எனக்கு 11 கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. கட்சிக்காக கொடி பிடிக்காதவர்கள் எல்லாம் பதவிக்கு வருகிறார்கள். 50 வருடமாக கட்சிக்காக உழைத்த எனக்கு இதுதான் மரியாதை. தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதவர்கள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும், கழக மூத்த முன்னோடிகளுக்கு இதுதான் மரியாதையா” எனக்கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், வேட்புமனுவில் வார்டு தவறாக குறிப்பிட்டுயிருந்ததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்.
திமுக மாவட்ட துணை செயலாளரின் இந்த செயல்குறித்து தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர் நிர்வாகிகள்.