மும்பை ரயில் நிலைய விபத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!
மும்பை ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரின் கடைசி மூச்சிலும் ஒரு பெண் பாலியல் ரீதியில் தீண்டப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரயில்நிலையத்தில் கனமழையின் காரணமாக பொதுமக்கள் ஓரமாக நின்றிருந்தனர். அப்போது, ஏற்பட்ட சிறு வதந்தியினால் பொதுமக்களிடையே அசாதாரண சூழல் உருவானது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் ரயில்நிலையத்தில் உள்ள படிக்கட்டில் ஒரே நேரத்தில் ஏறினர். இதில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 22 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், உயிருக்கு போராடியபடி வெளியே வர முயற்சித்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியில் தீண்டியுள்ளார். இது தற்செயலாக வீடியோ பதிவுகளில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ பல தரப்பினரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், கூட்டத்தில் சிக்கியிருந்த பெண்களின் நகைகள், பணப்பைகள் உள்ளிட்டவையும் திருடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பெண்கள் உயிருக்குப் போராடியவர்களும், உயிரிழந்த நிலையில் குவியல்களாகக் கிடந்தவர்களும் என்பது வேதனைக்குரிய தகவல்.
இந்த வழக்கு மும்பை காவல்துறையின் வட்டாரத்திற்குக் கீழ் வந்தாலும், நானும் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபடுவேன் என எல்பின்ஸ்டோன் ரயில்நிலைய காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்