Bihar Deputy Chief Minister Tejashwi Yadav condemns Prime Minister Modi

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 23 ஆம் தேதி பீகாரில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்புக்களும் முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 12 ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளால்அந்த தேதியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பொதுக்கூட்டத்தின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில்,நிதிஷ் குமார் பிரதமர் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார் என துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், அத்வானியின் சகாப்தத்தை எனது தந்தை லாலு பிரசாத் தடுத்து நிறுத்தியது போல், வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியின் ஆட்சிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முடிவு கட்டுவார். மெகா கூட்டணி மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. ஆனால் பாஜக தலைவர்களோ கோயில், மசூதி, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளால் சமூகத்தை விஷமத்தனமாக மாற்றுகின்றனர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.