Skip to main content

வித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின?

Published on 19/12/2017 | Edited on 19/12/2017
வித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின?

முன்பெல்லாம் நகரங்கள் கிராமங்கள் என வித்தியாசமின்றி, கரடிகளை கூட்டிக்கொண்டு சிலர் வருவார்கள். கரடிக்குப் பின்னால் குழந்தைகள் ஆரவாரம் செய்தபடி அலைவார்கள். கரடி கொடுக்கிற தாயத்துக்கு பணம் கொடுப்பார்கள்.

ஆனால் இப்போது அதுபோன்ற கரடிகளை காண முடிவதில்லையே ஏன் தெரியுமா? விலங்குகள் பாதுகாப்பு அமைப்புதான் காரணம்.

ராஜூ என்ற கரடிதான் விலங்குகள் நல அமைப்பு காப்பாற்றிய கடைசி கரடி. அதுதான் இந்தியாவின் கடைசி நடனமாடும் கரடி.



இப்போது 15 வயது ஆகும் ராஜூ தனது உரிமையாளரின் உணவுக்காக தன் வாழ்வின் முதல் 8 ஆண்டுகளை நடனமாடி வித்தை காட்டியே கழித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு, இதுபோன்ற வித்தைகாட்டும் கரடிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பால்  ராஜூ மீட்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ் என்ற விலங்குகள் நல அமைப்பினர் அழிந்துவரும் நிலையில் உள்ள கரடிகளை மீட்டு மறுவாழ்வு சரணாலயங்களில் சேர்த்தனர். அவர்கள் கரடிகளுக்கு மட்டும் மறுவாழ்வு அழிக்கவில்லை. கூடவே, அந்த கரடிகளை வைத்துப் பிழைத்த கலந்தர் எனும் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கும் மறுவாழ்வு அளித்தனர்.



நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கரடிகளை வைத்து வித்தைகாட்டி பிழைப்பு நடத்திவந்த நாடோடி சமூகம்தான் இந்த கலந்தர்கள். இவர்கள் வேட்டைக்காரர்களிடம் இருந்து கரடிக் குட்டிகளை வாங்கி அவற்றை பழக்கி வைத்திருப்பார்கள். பழுக்க காச்சிய இரும்பு கம்பியால் கரடிகுட்டிகளின் கோரைப்பற்களை உடைத்து, அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிற்றை மாட்டிவிடுவார்கள். பின்னர், அதை ஊர்ஊராக அழைத்துச்சென்று வித்தைகாட்டுவதுதான் அவர்களின் பிழைப்பு. இவர்களிடமிருந்து கரடிகளை மீட்டு அந்த சமூக மக்களுக்கும் மறுவாழ்வு அளித்து வருகின்றனர் வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ் என்ற விலங்குகள் நல அமைப்பினர்.

7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ வெறும் 60கிலோ எடையில், ஒரு துன்பகரமான நிலையில் எங்கள் கண்ணில் பட்டது. தற்போது ராஜூ நல்ல ஆரோக்கியத்துடன் தனது புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்கிறார் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அருண் ஏ.ஷா.

- இசக்கி

சார்ந்த செய்திகள்