Skip to main content

ரகுமான்; தமிழுக்குக் கிடைத்த தத்துவஞானி!

Published on 09/11/2017 | Edited on 09/11/2017



 இன்று கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்த நாள். அவர் நம்முடன்  இல்லாத  முதல் பிறந்த  நாள். அவரது கவிதைகள்  அரசியலைப்   பேசியிருக்கின்றன, தத்துவங்களைத்  திறந்திருக்கின்றன, எளிய மனிதர்களின்  கைபிடித்து வலிய வார்த்தை வடிவங்களை சுற்றிக்  காட்டியிருக்கின்றன. கவிக்கோவின் அன்பைப் பெற்ற நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர்  ஆரூர் தமிழ்நாடன், அவரது தத்துவ பார்வைகளைப்  பற்றி  எழுதிய "ரகுமான்;  தமிழுக்குக் கிடைத்த தத்துவஞானி!" என்ற  ஆய்வுக்கட்டுரை கவிக்கோ அவர்கள்  

மிகவும் விரும்பிப் பாராட்டியது. அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே...            


குற்றக் கூண்டில் இறைவன்!

ரகுமான் ஏக இறைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர். இறைவன் ஓருவனே என்பதும்

அவனே எல்லாவற்றையும் படைத்தவன் என்பதும் அவரது நம்பிக்கை. எனினும் இறைவன்

என்பதற்காக அவனை  சும்மாவிட்டுவிட முடியாது. வள்ளுவன் விட்டானா?

’பரந்து கெடுக’ என  அவனை சபிக்கவில்லையா?  அவன் மரபில் வந்த ரகுமான் மட்டும்

இறைவனை சும்மா  விட்டுவிடுவாரா? தனது தத்துவங்களுக்கு ஆதார சுருதியாக இருக்கும் 

கேள்விகளை அவனை  நோக்கியும் வீசுகிறார் ரகுமான். கொஞ்சம் கறாராகவே. எப்படி? 

‘நீ அன்பு என்றால், இந்தப் பகை யார்?

நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?

நீ ஆனந்தம் என்றால் இந்தத் துயரம் யார்?

நீ சுந்தரம் என்றால் இந்த அசிங்கம் யார்?

நீ உண்மை  என்றால் இந்தப் பொய் யார்?

நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?’

   -என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, தித்திப்பாய்த் திடுக்கிட வைக்கிறார். இது ‘ஆலாபனை’  தொகுப்பில் இருக்கும் ’தவறான எண்’ என்கிற கவிதையில் எழுப்பப்பட்ட ஞானக்கேள்விகள். 

அவன் பகல் என்றால், இரவும் அவன்தான்.  அவன் மலர் என்றால், முள்ளும் அவன்தான் என்பது  அவருக்கு நன்றாகத் தெரியும். எனினும் செல்லச் சண்டை இடுவதுபோல், இறைமையையே  கேள்விக்குள்ளாக்கி கிறுகிறுக்க வைக்கிறார். கேள்வி எழுப்புவது என்பதே ஒருவகைக்  கண்டனம்தான். படைப்பின் பாரபட்சத்தை கண்டிக்கும் உரிமை கவிஞனுக்குக் கண்டிப்பாக  உண்டு. அதனால்தான் இறைவனைக் குற்றக்கூண்டில் ஏற்றிக் கேள்விகளால் தன் கண்டனத்தை  மேற்கண்டபடித் தெரிவிக்கிறார் ரகுமான். 

வாழ்வின் மறுபக்கத்தை உணர்த்தும் ரகுமானின் இத்தகைய தத்துவக் கேள்விகள், அறிவுக்கு  ஆனந்தத்தைத் தரக்கூடிய கேள்விகள். 

ரகுமானின் கவிதைகளுக்கு ஆதார ஆணிவேராக இருப்பது தத்துவமே. காதலோ, சமூகமோ,  அரசியலோ, அவரது எந்தக் கிளையைத் தொட்டுத் தடவிச் சென்றாலும் அது தத்துவ  வேர்களில்தான் போய் முடிகிறது. ரகுமானின் கவிதையோ கட்டுரையோ ரகுமான்  எழுத்துக்களின் அடிநாதம் தத்துவம்தான். தத்துவம், ரகுமானின் தனித்துவம். அவரது சகல  நூல்களிலும் இதை  நாம் உணர்ந்துய்யலாம். 




கண்ணீரும் புன்னகையும்!

ரகுமானின் பல கவிதைகள் வாழ்க்கையைத் தத்துவத் தராசில் வைத்து எடைபோடுகின்றன.  

வாழ்க்கையைக் கண்ணாமூச்சி ஆட்டம் என்றும் , புரியாத புதிர் என்றும் வர்ணித்தவர்கள் 

உண்டுஆனால் ரகுமானோ மெழுகுவர்த்தியின் தலையில் தன் சிந்தனையை ஏற்றுகிறார்

அதற்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடுகிறது என்கிறார்இதோ அந்தக் கவிதை...

'மெழுகுவர்த்தி

அழுதுகொண்டே சிரிக்கிறது ; அதற்கு

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டது போலும்’

உண்மைதான், கண்ணீராலும் புன்னகையாலும் ஆனதுதான் வழ்க்கை. இதற்குப் பொருத்தமான குறியீடு என்றால் மெழுகுவர்த்திதான். தீபப் புன்னகையை சுமக்கும் மெழுகுவர்த்தி, சொட்டுச் சொட்டாய் கண்ணீர்விடுகிறது அல்லவா? ரகுமானின் இந்த மெழுகுவர்த்திக் குறியீடே வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிவிடுகிறது.

பிறப்புக்கு முன் என்ன என்பதையோபிறப்புக்குப் பின் என்ன என்பதையோஅறுதியிட்டுச் 

சொல்ல ஆள் இல்லைஅது விளங்கிக்கொள்ளப்படாத இருண்மைஎனவேதான் ரகுமான்,

முடியிலும் இருள்முடிவிலும் இருள்

இடையில்ஒரு மின்னலைப்போல் வாழ்க்கை’

என்கிறார்மின்னல் ஒளிரும் தன்மையும் மறையும் தன்மையும் கொண்டது

அது விண்ணில் சில நொடிகள் மட்டும் எரிந்தடங்கும் விளக்கு.  

ஒவ்வொருவரும் விளக்கு போல் எரிந்துவிட்டுப் போகிறார்கள்

சிலர் மிருதுவாய் எரியும் சிம்னி விளக்குசிலர்முரட்டுத்தனமாய் எரியும் காடா விளக்கு

சிலர் கண்ணியமாய் எரியும் குத்துவிளக்குசிலர் பிரகாசமாய் எரியும் மின் விளக்கு

ஒருசிலர் மட்டுமே புகழோடு எரியும் சூரிய விளக்கு.

எது எப்படி இருப்பினும் அவரவரும் சொந்த வெளிச்சத்தில் ஒளிரவேண்டும் என்கிறார் ரகுமான்

ஏன்?

'இரவல் ஒளியை விட சொந்த இருள் மேலானது’ என்பதுதான் அவர் வைக்கும் வாதம். 'யானை பிழைத்த வேலேந்தலை’ப் போல், இரவல் வெளிச்சத்துக்கு, சொந்த இருள் இனிதென்கிறார். இரவல் வெளிச்சம், அடிமைத்தனம். சொந்த இருள் சுதந்திரம்.

என்னதான் முயன்றாலும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுகிறவர்களுக்கு ரகுமான் சொல்கிறார்...

பெண்ணையும் வாழ்க்கையையும் அறிய முயலாதே;

அனுபவி அதுபோதும்’

எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள  வேண்டும்  என்று புத்தி அடம்பிடிக்குமானால்,  நாம் நம் பொழுதுகளை அவஸ்த்தையிடம்  ஒப்படைக்க வேண்டியிருக்கும். ரோஜா மணக்கிறது என்றால் அது எப்படி என்று மண்டையை  உடைத்துக்கொள்ளாமல், ரகுமான் அறிவுறுத்துவது போல், அதன் நறுமணத்தை சுகித்துவிட்டு  போய்விடுவதே புத்திசாலித்தனம்.  எல்லா இடங்களிலும் கேள்விச் சாவிகள் பயன்படாது.  பூட்டுக்களிடம் வேலைசெய்யும் சாவிகளைக் கொண்டு சுவர்களைத் திறக்க முயலக்கூடாது.  ரகுமானுக்கு பூட்டுக்கும் சுவருக்கும் இடையிலான வேறுபாடு  நன்றாகவே தெரியும்.  அதனால்தான் அனுபவித்துவிட்டுப்போ என்று அறிவுறுத்துகிறார். 


சார்ந்த செய்திகள்