
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் குறிப்பிடத்தகுந்த வகையில் சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. அதற்கு எதிர்வினையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் அந்நாட்டு மக்களுக்குக்கான குடிநீர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவருக்கு இந்தியாவை சேர்ந்த ரசிகர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹனியா அமீர், 10 லட்சத்திற்கும் அதிகமான யூடியூப் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.80 கோடி பேர் அவரை பின்தொடர்கின்றனர். அவருக்கு இந்தியாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவர் அவருக்கு வாட்டர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சர்தார்ஜி-3 என்ற இந்திய திரைப்படத்தில் நடிகை ஹனியா அமீர் நடித்து வந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சிந்து நதி ஒப்பந்தம் ரத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்திய ரசிகர் ஒருவர்இப்படி நூதனமாக தண்ணீர் பாட்டிலை அனுப்பியுள்ளதாக வெளியான வீடியோ வைரலாகி வருகிறது. அதேநேரம் மிகவும் சென்சிட்டீவான இந்த தாக்குதல் சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேலிக்கூத்தாக பார்ப்பது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.